உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025: முதலிடத்தை இழந்தது இந்திய அணி!
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது இன்றுடன் நிறைவடைந்தது. இதில் நியூசிலாந்து அணியானது மூன்று போட்டிகளிலும் வெற்றியைப் பதிவுசெய்து 3-0 என்ற கணக்கில் இந்தியாவை வீழ்த்தி ஒயிட்வாஷ் செய்தும் அசத்தியுள்ளது.
அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி வான்கடேவில் நடைபெற்ற நிலையில், இதில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 235 ரன்களை எடுத்தது. அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்தியா அணியும் 263 ரன்னில் ஆல்அவுட் ஆனது. பின்னார் 28 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய நியூசிலாந்து அணி 174 ரன்களைச் சேர்த்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட் ஆனது.
இதனால் இந்தியாவுக்கு 147 ரன்கள் இலக்காக நியமிக்கப்பட்டது. அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணியில் ரோஹித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். இதனால் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 121 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. இதன்மூலம் நியூசிலாந்து அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது.
இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் புதுபிக்கப்பட்ட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் நியூசிலாந்து அணிக்கு எதிரான படுதோல்வியின் காரணமாக முதலிடத்தில் இருந்த இந்திய அணியானது தற்சமயம் அந்த இடத்தை இழந்துள்ளது. அதன்படி புதுபிக்கப்பட்ட பட்டியலில் ஆஸ்திரேலிய அணியானது 62.50 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. அதேசமயம் இந்திய அணி 58.33 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
மேற்கொண்டு இலங்கை அணி 55.56 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும் தொடர்கின்றது. அதேசமயம் இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றுள்ள நியூசிலாந்து அணி 54.55 புள்ளிகளுடன் நான்காம் இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது. மேலும் கடந்த வாரம் நான்காம் இடத்தை பிடித்திருந்த தென் ஆப்பிரிக்க அணியானது தற்போது 54.17 புள்ளிகளுடன் 5ஆம் இடத்திற்கு பின் தங்கியுள்ளது. இதற்கடுத்த இடத்தில் இங்கிலாந்து அணி 40.79 புள்ளிகளுடன் 6ஆம் இடத்தில் உள்ளது.
Also Read: Funding To Save Test Cricket
மேலும் பாகிஸ்தான் அணியானது 33.33 புள்ளிகளைப் பெற்று தற்போது 7ஆம் இடத்திலும், வங்கதேச அணி தற்போது 30.56 புள்ளிகளுடன் 8ஆம் இடத்திலும் உள்ள நிலையில், வெஸ் இண்டீஸ் அணியானது 18.52 புள்ளிகளுடன் தொடர்ந்து கடைசி இடத்திலும் நீடித்து வருகின்றனர். தற்போது இந்த பட்டியலில் முதல் 5 இடங்களில் உள்ள அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருவதால் இதில் எந்த இரண்டு அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.