பெரிய இன்னிங்ஸை பதிவு செய்ய விரும்புகிறோம் - ஷுப்மன் கில்!
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி 5 போட்டிகளை உள்ளடக்கிய பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்துள்ள முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்ததுடன் 1-1 என்ற கணக்கில் தொடரையும் சமன்செய்து அசத்தியுள்ளன.
ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியானது பிரிஸ்பேனில் உள்ள காபா கிரிக்கெட் மைதானத்தில் நாளை (டிசம்பர் 14) நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்துள்ள நிலையில், இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று தொடரில் முன்னிலைப் பெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.
இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய வீரர் ஷுப்மன் கில் சில கருத்துகளை தெரிவித்துள்ளார். அப்போது பேசிய அவர், “இப்போட்டியில் ஒரு அணியாக, ஒரு பேட்டிங் குழுவாக நாங்கள் முதலில் ஒரு பெரிய இன்னிங்ஸை பதிவு செய்ய விரும்புகிறோம். அதுவே எங்களுடைய முக்கிய விவாதப்பொருளாக இருந்தது. ஒவ்வொரு பேட்ஸ்மேனுக்கும் அவரவர் விளையாட்டுத் திட்டம் இருக்கும், ஆனால் ஒரு குழுவாக நாங்கள் ஒரு பெரிய முதல் இன்னிங்ஸ் ஸ்கோரைப் பெற முயற்சிப்போம்.
ஏனெனில் கடந்த போட்டியில் நாங்கள் முதல் இன்னிங்ஸில் போதுமான அளவு ரன்களைச் சேர்க்க தவறிவிட்டோம். அதிலும் குறிப்பாக முதல் இன்னிங்ஸில் நாங்கள் 30-40 ரன்களை குறைவாக எடுத்திருந்தோம். அதனால் முந்தைய போட்டிகளில் செய்த தவறுகளை இந்த போட்டியில் சரிசெய்வோம் என்று நம்புகிறேன். மேலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக எவ்வாறு விளையாட வேண்டும் என்ற திட்டத்தையும் நாங்கள் அறிவோம்” என்று தெரிவித்துள்ளார்.
நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஷுப்மன் கில் பெரிதளவில் ரன்களைச் சேர்க்க முடியமால் தடுமாறி வருகிறார். அதிலும் முதல் போட்டியில் அரைசதம் கடந்த அவர், அதன்பின் பெரிதளவில் ரன்களைச் சேர்க்கவில்லை. மேலும் கடந்த 10 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் அவர் ஒரு சதம் மற்றும் ஒரு அரைசதத்தை மட்டுமே பதிவுசெய்துள்ளார். அதிலும் அந்த சதமானது வங்கதேச அணிக்கு எதிராக அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணியின் உத்தேச லெவன்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், ஷுப்மான் கில், விராட் கோலி, ரிஷப் பந்த், ரோஹித் சர்மா (கேப்டன்), நிதிஷ் குமார் ரெட்டி, ஆகாஷ்தீப்/வாஷிங்டன் சுந்தர், ஹர்ஷித் ராணா, ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்.
Also Read: Funding To Save Test Cricket
ஆஸ்திரேலியா பிளேயிங் லெவன்: உஸ்மான் கவாஜா, நாதன் மெக்ஸ்வீனி, மார்னஸ் லாபுஷாக்னே, ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், அலெக்ஸ் கேரி, பாட் கம்மின்ஸ் (கே), மிட்செல் ஸ்டார்க், நாதன் லையன், ஜோஷ் ஹேசில்வுட்.