டி20 உலகக்கோப்பை: ஏப்ரல் இறுதியில் இந்திய அணி அறிவிக்கப்பட வாய்ப்பு?

Updated: Sat, Mar 30 2024 21:01 IST
Image Source: Google

வரும் ஜூன் மாதம் ஐசிசி நடத்தும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறவுள்ளது. எப்போதும் இல்லாத அளவின் இந்த முறை டி20 உலகக்கோப்பை தொடர் 20 அணிகளைக் கொண்ட நடத்தப்படவுள்ளது. அதன்படி இந்த அணிகள் நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டதுடன், போட்டி அட்டவணையையும் ஐசிசி சமீபத்தில் அறிவித்திருந்தது. இதனால் இத்தொடரில் சாம்பியன் பட்டம் வெல்வதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயராகி வருகின்றன. 

இந்நிலையில் இத்தொடருக்கான இந்திய அணி எப்போது அறிவிக்கப்படும் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி ஏப்ரல் மாத இறுதியில் டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏனெனில் மே ஒன்றாம் தேதி உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும் அணி வீவரத்தை ஐசிசியிடம் ஒவ்வொரு கிரிக்கெட் வாரியமும் சமர்பிக்க வேண்டும். 

அதேசமயம் அணியில் ஏதேனும் மாற்றங்களை செய்ய விரும்பும் அணிகளுக்கு மே 25ஆம் தேதி வரை கால அவகாசமும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் மே 26ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. அதேசமயம் ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் மே 19ஆம் தேதியுடன் முடிவடையவுள்ளது. 

இதனால், பிளேஆஃப் சுற்றுக்கு இடம்பெறாத அணிகளில் இடம் பிடித்துள்ள வீரர்கள் தேர்வு செய்யப்பட்டால் அவர்களை முன்னதாகவே அமெரிக்கா அனுப்ப பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாகவும், ஐபிஎல் பிளேஆஃப் சுற்றுகளில் விளையாடும் அணிகளில் இடம் பிடித்திருந்தால் அவர்கள் தொடரை முடித்த கையோடு சக வீரர்களுடன் இணைவார்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

மேலும் நடப்பு ஐபிஎல் தொடரைப் பொறுத்த இந்திய அணியின் வீரர்கள் தேர்வு இருக்கும் என்பதால் இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட ஆர்வம் காட்டிவருகின்றனர். அதிலும் குறிப்பாக இந்திய அணி தேர்வாளர்கள் பெரும்பாலான ஐபிஎல் போட்டிகளை நேரில் சென்று பார்வையிட்டு வருகிறார்கள். இதில் அவர்களின் சிறப்பான ஆட்டம் மற்றும் உடற்தகுதி போன்றவற்றை தேர்வாளர்கள் கருத்தில் கொண்டு அணியை தேர்வு செய்யவுள்ளது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை