ஐபிஎல் 2023: மும்பையை 139 ரன்களில் சுருட்டியது சிஎஸ்கே!
16ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் விறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்று வரும் 49ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வழக்கத்திற்கு மாறாக கேமரூன் க்ரீன் - இஷான் கிஷன் இணை தொடக்கம் கொடுத்தனர். ஆனால் இந்த இணையும் சோபிக்க தவறியது. இதில் 6 ரன்களை எடுத்திருந்த க்ரீனின் விக்கெட்டை துஷார் தேஷ்பாண்டே க்ளீன் போல்டாக்கினார்.
அதன்பின் பந்துவீச வந்த தீபக் சஹார், இஷான் கிஷானை 7 ரன்களிலும், கேப்டன் ரோஹித் சர்மாவை ரன்கள் ஏதுமின்றியும் விக்கெட்டுகளை வீழ்த்தி பெவிலியனுக்கு வழியனுப்பிவைத்தார். இதையடுத்து ஜோடி சேர்ந்த நேஹல் வதேர - சூர்யகுமார் யாதவ் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
பின் அதிரடியாக விளையாட முயன்ற சூர்யகுமார் யாதவ் 26 ரன்களைச் சேர்த்த நிலையில் ரவீந்திர ஜடேஜா பந்துவீச்சில் க்ளீன் போல்டாகினார். இருப்பினும் மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நேஹல் வதேரா அரைசதம் கடந்து அணியின் மானத்தைக் காப்பற்றினார். பின் 8 பவுண்டரி, ஒரு சிக்சர் என 64 ரன்களைச் சேர்த்திருந்த நேஹல் வதேரா, மதிஷா பதிரானாவின் அற்புதமான யார்க்கரின் மூலம் க்ளீன் போல்டாகினார்.
அதன்பின் களமிறங்கிய வீரர்கள் பதிரானாவின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர். இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்களை மட்டுமே எடுத்தது. சிஎஸ்கே தரப்பில் அபாரமாக பந்துவீசிய பதிரானா 3 விக்கெட்டுகளையும், தீபக் சஹார், துஷார் தேஷ்பாண்டே தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.