17ஆவது சீசன் ஐபிஎல் தொடரானது விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்றுவரும் 3ஆவது லீக் போட்டியில் ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

Advertisement

இதையடுத்து பேட்டிங்கைத் தொடங்கிய கேகேஆர் அணிக்கு பில் சால்ட் - சுனில் நரைன் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய பில் சால்ட், மார்கோ ஜான்சென் ஓவரில் அடுத்தடுத்து மூன்று சிக்சர்களை விளாசி மிரட்டினார். அதேசமயம் மறுபக்கம் 2 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த சுனில் நரைன் தேவையில்லாமல் ரன் அவுட்டாகி பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். 

Advertisement

அதன்பின் களமிறங்கிய வெங்கடேஷ் ஐயர் 7 ரன்களுக்கும், கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் ரன்கள் ஏதுமின்றியும் என அடுத்தடுத்து நடராஜன் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய நிதிஷ் ரானாவும் 9 ரன்களுக்கு தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த பில் சால்ட் - ரமந்தீப் சிங் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். 

இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ரமந்தீப் சிங் தனது அரைசதத்தைப் பதிவுசெய்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒரு பவுண்டரி, 4 சிக்சர்கள் என 35 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பில் சால்ட் ஐபிஎல் தொடரில் தனது முதல் அரைசதத்தைப் பதிவுசெய்தார். அதன்பின் 3 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 54 ரன்களில் பில் சால்ட்டும் தனது விக்கெட்டை இழந்தார். 

இதனையடுத்து இணைந்த ரிங்கு சிங் - ஆண்ட்ரே ரஸல் இணை அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதில் அதிரடிக்கு பெயர்போன ஆண்ட்ரே ரஸல் வழக்கம்போல் தனது அபாரமான பேட்டிங் திறமையால் சிக்சர்களை பறக்கவிட்டு எதிரணி பந்துவீச்சாளர்களை கதிகலங்க வைத்தார். அவருக்கு துணையாக ரிங்கு சிங்கும் ஸ்டிரைக்கை மாற்றிக்கொடுக்க அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. 

இதில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆண்ட்ரே ரஸல் 20 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து மிரட்டினார். அதேசமயம் அதிரடியாக விளையாட முயன்ற ரிங்கு சிங் 23 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தாலும், அடுத்து களமிறங்கிய மிட்செல் ஸ்டார்க்கும் முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து அசத்தினார். இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஆண்ட்ரே ரஸல் 3 பவுண்டரி, 7 சிக்சர்கள் என 64 ரன்களையும், ஸ்டார்க் 6 ரன்களையும் சேர்த்தனர்.

Advertisement

இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்களைக் குவித்துள்ளது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய நடராஜன் 3 விக்கெட்டுகளையும், மயங்க் மார்கண்டே 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதையடுத்து 209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி விளையாடவுள்ளது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News