டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்காக விளையாட உறுதியாக இருக்கிறேன் - தினேஷ் கார்த்திக்!

Updated: Sat, Apr 20 2024 20:43 IST
டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்காக விளையாட உறுதியாக இருக்கிறேன் - தினேஷ் கார்த்திக்! (Image Source: Google)

இந்தாண்டு ஜூன் மாதம் ஐசிசி நடத்தும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறவுள்ளது. எப்போதும் இல்லாத அளவின் இந்த முறை டி20 உலகக்கோப்பை தொடர் 20 அணிகளைக் கொண்ட நடத்தப்படவுள்ளது. அதன்படி இந்த அணிகள் நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டதுடன், போட்டி அட்டவணையையும் ஐசிசி சமீபத்தில் அறிவித்திருந்தது. இதனால் இத்தொடரில் சாம்பியன் பட்டம் வெல்வதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயராகி வருகின்றன. 

இந்நிலையில் இத்தொடருக்கான இந்திய அணி இம்மாத இறுதியில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி நடப்பு ஐபிஎல் தொடரைப் பொறுத்த இந்திய அணியின் வீரர்கள் தேர்வு இருக்கும் என்பதால் இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட ஆர்வம் காட்டிவருகின்றனர். அதிலும் குறிப்பாக இந்திய அணி தேர்வாளர்கள் பெரும்பாலான ஐபிஎல் போட்டிகளை நேரில் சென்று பார்வையிட்டு வருகிறார்கள்.

இதனால் நடப்பு டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் யார் யார் இடம்பிடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இந்திய அணியின் பெரும்பாலான இடங்கள் உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், விக்கெட் கீப்பருக்கான போட்டி மட்டும் தொடர்ந்து வருகிறது. இதில் சஞ்சு சாம்சன், ரிஷப் பந்த், கேஎல் ராகுல் மற்றும் இஷான் கிஷான் ஆகியோருக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. 

இதனால் இவர்களில் யார் இந்திய அணியில் இடம்பிடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டுவரும் நிலையில், தற்போது அந்த போட்டியில் ஆச்சரியப்படும் வகையில் அனுபவ வீரர் தினேஷ் கார்த்திக்கும் இணைந்துள்ளார். நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திவரும் தினேஷ் கார்த்திக் ஒவ்வொரு போட்டியிலும் அதிரடியாக விளையாடி ரன்களை குவிப்பதுடன், சிறந்த ஃபினிஷராகவும் வளம்வருகிறார். 

இந்நிலையில், டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி பயணிக்கும் விமானத்தில் இடம்பிடிக்க என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “டி20 உலகக் கோப்பைக்கான விமானத்தில் இருக்க தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வதில் உறுதியாக இருக்கிறேன். என் வாழ்க்கையில் இந்த கட்டத்தில், இந்தியாவிற்காக விளையாடுவது எனக்கு மிகப்பெரிய தருணமாக இருக்கும்.

நான் அவ்வாறு செய்ய மிகவும் ஆர்வமாக உள்ளேன். இந்த டி20 உலகக் கோப்பையில் இந்தியாவிற்காக விளையாடுவதைத் தவிர என் வாழ்க்கையில் பெரிதாக எதுவும் இல்லை” என்று தெரிவித்துள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள தினேஷ் கார்த்திக் 75.33 என்ற சராசரியுடன் 226 ரன்களை குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை