ஐபிஎல் 2024: பரபரப்பான ஆட்டத்தில் ஆர்சிபியை ஒரு ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது கேகேஆர்!

Updated: Sun, Apr 21 2024 19:48 IST
ஐபிஎல் 2024: பரபரப்பான ஆட்டத்தில் ஆர்சிபியை ஒரு ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது கேகேஆர்! (Image Source: Google)

ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 36ஆவது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்து கேகேஆர் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. இதையடுத்து களமிறங்கிய கேகேஆர் அணிக்கு பில் சால்ட் மற்றும் சுனில் நரைன் இணை தொடக்கம் கொடுத்தனர். 

இப்போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பில் சால்ட் அடுத்தடுத்து பவுண்டரியும் சிக்ஸர்களையும் விளாசி 14 பந்துகளில் 7 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 48 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அதன்பின் மற்றொரு தொடக்க வீரரான சுனில் நரைனும் 10 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, பின்னர் களமிறக்கிய அங்கிரிஷ் ரகுவன்ஷி, வெங்கடேஷ் ஐயர் ஆகியோரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ரிங்கு சின் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். 

இதில் அதிரடியாக விளையாட முயற்சியில் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 24 ரன்கள் எடுத்த நிலையில் ரிங்கு சிங் தனது விக்கெட்டை இழந்தார். ஆனலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்ரேயாஸ் ஐயர் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். பின் 50 ரன்களில் ஸ்ரேயாஸ் ஐயர் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ரமந்தீப் சிங் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். அவருக்கு துணையாக ஆண்ட்ரே ரஸலும் அதிரடி காட்ட அணியின் ஸ்கோரும் 200 ரன்களைக் கடந்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ரமந்தீப் சிங் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 22 ரன்களைச் சேர்த்தார். 

மறுபக்கம் ஆண்ட்ரே ரஸல் 4 பவுண்டரிகளுடன் 27 ரன்களைச் சேர்க்க, 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது 6 விக்கெட் இழபிற்கு 222 ரன்களைச் சேர்த்தது. ஆர்சிபி அணி தரப்பில் யாஷ் தயாள், கேமரூன் க்ரீன் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். இதையடுத்து 223 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி களமிறங்கிய ஆர்சிபி அணிக்கு கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் - விராட் கோலி இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அதிரடியாக தொடங்கிய விராட் கோலி ஒரு பவுண்டரி, 2 சிஸ்கர்கள் என 18 ரன்கல் எடுத்த நிலையில் சர்ச்சைகுரிய முறையில் விக்கெட்டை இழந்தார். 

அவரைத்தொடர்ந்து 7 ரன்களை மட்டுமே எடுத்திருந்த கேப்டன் டு பிளெசிஸும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் ஜோடி சேர்ந்த வில் ஜேக்ஸ் - ராஜத் பட்டிதார் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பில் சால்ட் ஐபிஎல் தொடரில் தனது முதல் அரைசதத்தைப் பதிவுசெய்ய, மறுப்பக்கம் ராஜத் பட்டிதார் 21 பந்துகளில் அரைசதம் கடந்து மிரட்டினார். இதன்மூலம் இருவரும் இணைந்து 3ஆவது விக்கெட்டிற்கு 102 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். 

அதன்பின் 4 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 55 ரன்கள் சேர்த்த நிலையில் வில் ஜேக்ஸ் விக்கெட்டை இழக்க, அதே ஓவரில் 3 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 52 ரன்கள் எடுத்த நிலையில் ராஜத் பட்டிதாரும் ஆண்ட்ரே ரஸல் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தனர். இதையடுத்து களமிறங்கிய கேமரூன் க்ரீன் 6 ரன்களுக்கும், மஹிபால் லாம்ரோர் 4 ரன்களுக்கும் என சுனில் நரைன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். அதன்பின் இணைந்த சுயாஷ் பிரபுதேசாய் - தினேஷ் கார்த்திக் இணை ஓரளவு தாக்குப்பிடித்து விக்கெட் இழப்பை தடுத்ததுடன் சீரான இடைவேளையில் அணியின் ஸ்கோரையும் உயர்த்தினார். 

ஆனால் இதில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுயாஷ் பிரபுதேசாய் 24 ரன்களில் விக்கெட்டை இழந்து நடையைக் கட்ட, மறுபக்கம் அணியின் நம்பிக்கையாக இருந்த தினேஷ் கார்த்திக்கும் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 25 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இதனால் ஆர்சிபி அணி வெற்றிக்கு கடைசி ஓவரில் 21 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. ஸ்டார்க் வீசிய அந்த ஓவரின் முதல் பந்திலேயே கரண் சர்மா சிக்ஸ அடித்து ஆச்சரியமளித்தார். அதன்பின் இரண்டாவது பந்தை தவறவிட்ட அவர், மூன்றாவது மற்றும் நான்காவது பந்திலும் சிக்ஸர்களை விளாசி அணியை வெற்றிக்கு அருகில் அழைத்துச் சென்றார். 

இதனால் கடைசி இரண்டு பந்துகளில் ஆர்சிபி அணி வெற்றிக்கு 3 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலையில், 20 ரன்களை எடுத்திருந்த கரண் சர்மா தனது விக்கெட்டை இழந்தார். இதனால் கடைசி பந்திற்கு 3 ரன்கள் தேவை என்ற நிலையில், லோக்கி ஃபெர்குசன் அந்த பந்தை அடித்து விட்டு இரண்டு ரன்கள் எடுக்க முயற்சித்த நிலையில் ரன் அவுட்டாகினார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் ஆர்சிபி அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 221 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கேகேஆர் அணி தரப்பில் ஆண்ட்ரே ரஸல் 3 விக்கெட்டுகளையும், சுனில் நரைன், மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

இதன்மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இந்த தோல்வியின் மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தொடர்ச்சியாக 6ஆவது தோல்வியைச் சந்தித்ததுடன், விளையாடிய 8 போட்டிகளில் ஒரு வெற்றியை மட்டுமே பதிவுசெய்துள்ளது. இதன்மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணியின் பிளே ஆஃப் கனவும் ஏறத்தாழ தகர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.  

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை