காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மிட்செல் மார்ஷ்; சிக்கலில் டெல்லி கேப்பிட்டல்ஸ்!

Updated: Mon, Apr 22 2024 19:59 IST
காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மிட்செல் மார்ஷ்; சிக்கலில் டெல்லி கேப்பிட்டல்ஸ்! (Image Source: Google)

இந்தியாவில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்து வருகிறது. இத்தொடரில் ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நடப்பு சீசனில் விளையாடிய 8 போட்டிகளில் மூன்று வெற்றிகளை மட்டுமே பதிவுசெய்து புள்ளிப்பட்டியலின் எட்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

இதனால் அந்த அணி அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம் அடையும் வகையில் தீவிரமாக தயாராகி வருகிறது. இந்நிலையில் காயம் காரணமாக சில போட்டிகளை தவறவிட்ட டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் அதிரடி ஆல் ரவுண்டர் மிட்செல் மார்ஷ், தற்போது தனது காயம் தீவிரமடைந்ததின் காரணமாக அவர் மருத்துவ சிகிச்சைக்காக ஆஸ்திரேலியா திரும்பினார்.

முன்னதாக ஏப்ரல் 03ஆம் தேதி நடைபெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியின் போது காயத்தை சந்தித்தார். இதனையடுத்து, அவர் அடுத்தடுத்த போட்டிகளை தவறவிட்டார். அதன்பின் மிட்செல் மார்ஷ் தனது மேல் சிகிச்சைக்காக தாயகம் திரும்பிய நிலையில், தற்போதுவரை அவர் காயத்திலிருந்து குணமடையாத காரணத்தால் நடப்பு ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளிலிருந்து அவர் விலகுவார் என தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து டேல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் கூறுகையில், “மிட்செல் மார்ஷ் மீண்டும் திரும்பி வருவார் என்று நான் நினைக்கவில்லை. அவர் தனது காயத்திலிருந்து மீண்டு வர ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் தேவையான நடுவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் காரணமாக அவர் இத்தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளில் பங்கேற்க மாட்டார். ஆனால் அவர் டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாடுவார் என நம்பிகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே பேட்டிங்கில் தடுமாறி வரும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் தற்போது மிட்செல் மார்ஷும் எஞ்சியுள்ள போட்டிகளிலிருந்து விலகியுள்ளது அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம் அவருக்கான மாற்று வீரர் யார் என்பது குறித்தும் எந்த தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

டெல்லி கேப்பிட்டல்ஸ்: ரிஷப் பந்த்(கேப்டன்), டேவிட் வார்னர், பிருத்வி ஷா, ஜேக் ஃபிரேசர்-மெக்குர்க், யாஷ் துல், ஸ்வஸ்திக் சிகாரா, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அபிஷேக் போரல், குமார் குஷாக்ரா, ரிக்கி புய், ஷாய் ஹோப், பிரவின் துபே, அக்ஸர் படேல், மிட்செல் மார்ஷ், லலித் யாதவ், விக்கி ஓஸ்ட்வால், சுமித் குமார், அன்ரிச் நோர்ட்ஜே, முகேஷ் குமார், கலீல் அகமது, குல்தீப் யாதவ், இஷாந்த் சர்மா, ஜேய் ரிச்சர்ட்சன், ரசிக் சலேம் தார்

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை