இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வந்த் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெற்ற முதலாவது குவாலிஃபையர் போட்டியில் லீக் சுற்றின் முடிவில் புள்ளிப்பட்டியலின் முதலிரண்டு இடங்களைப் பிடித்த ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் அணியும் பலப்பரீட்சை நடத்தின. அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா இணை தொடக்கம் கொடுத்தனர். இப்போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டிராவிஸ் ஹெட் ரன்கள் ஏதுமின்றி எதிர்கொண்ட இரண்டாவது பந்திலேயே கிளின் போல்டாகி பெவிலியன் திரும்பினார். அவரைத்தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான அபிஷேக் சர்மாவும் 3 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய நிதிஷ் ரெட்டி 9 ரன்களிலும், ஷபாஸ் அஹ்மத் ரன்கள் ஏதுமின்றியும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து அதிர்ச்சி கொடுத்தார். 

Advertisement

பின்னர் இணைந்த ராகுல் திரிபாதி மற்றும் ஹென்ரிச் கிளாசென் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தினர். ஒரு கட்டத்திற்கு மேல் இருவரும் இணைந்து அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் 100 ரன்களைத் தாண்டியது. இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ராகுல் திரிபாதி தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதேசமயம் மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஹென்ரிச் கிளாசென் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 32 ரன்கள் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார். 

அவரைத்தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ராகுல் திரிபாதியும் 55 ரன்களில் தேவையின்றி ரன் அவுட்டாகினார். பின்னர் வந்த சன்வீர் சிங் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அதிரடியாக விளையாடிய அப்துல் சமத் 16 ரன்களில் பெவிலியன் திரும்பினார். அவரைத்தொடர்ந்து புவனேஷ்வர் குமாரும் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். இருப்பினும் ஒருபக்கம் நங்கூரம் போல் நின்ற கேப்டன் பாட் கம்மின்ஸ் இறுதிவரை களத்தில் நின்றதுடன் அதிரடியாக விளையாடி 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 30 ரன்களைச் சேர்த்தார். 

இதன்மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 159 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளையும், வருன் சக்ரவர்த்தி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். இதனையடுத்து 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு ரஹ்மனுல்லா குர்பாஸ் - சுனில் நரைன் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் இணைந்து அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர்.

இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ரஹ்மனுல்லா குர்பாஸ் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 23 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான சுனில் நரைனும் 21 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் இணைந்த வெங்கடேஷ் ஐயர் மற்றும் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் இணை அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய வெங்கடேஷ் ஐயர் 28 பந்துகளில் அரைசதம் கடக்க, கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 23 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். 

Advertisement

இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த வெங்கடேஷ் ஐயர் 5 பவுண்டரி, 4 சிக்ஸர்களுடன் 51 ரன்களையும், கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 5 பவுண்டரி, 4 சிக்ஸர்களுடன் 58 ரன்களையும் சேர்த்ததுடன், இருவரும் இணைந்து 97 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை வெற்றிக்கு அழைத்துச்சென்றனர். இதன்மூலம் கேகேஆர் அணி 13.4 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 8 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் நடப்பு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அசத்தியுள்ளது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News