ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் நட்சத்திர வீரர்கள் சோபிக்க தவறி தடுமாறிய நிலையில் நிதீஷ் ரெட்டியின் அபாரமான ஆட்டத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக நிதீஷ் ரெட்டி 64 ரன்களைச் சேர்த்தார். பஞ்சாப் அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

Advertisement

இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணியிலும் ஷிகர் தவான், ஜானி பேர்ஸ்டோவ், பிரப்ஷிம்ரன் சிங், ஜிதேஷ் சர்மா போன்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். அதேசமயம் அதிரடியாக விளையாடி சாம் கரன், சிக்கந்தர் ரஸா ஆகியோரும் போதிய ரன்களைச் சேர்க்க தவறினர். இருப்பினும் இறுதிவரை போராடிய ஷஷாங்க் சிங் 46 ரன்களையும், அஷுதோஷ் சர்மா 33 ரன்களை சேர்த்த போது, அந்த அணியால் 20 ஓவர்களில் 180 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்தது. இதன்மூலம் ஹைதராபாத் அணி த்ரில் வெற்றியைப் பெற்றது. மேலும் அந்த அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்த நிதீஷ் ரெட்டி ஆட்டநாயகன் விருதை வென்றார்.

Advertisement

இந்நிலையில் இப்போட்டியில் அடைந்த தோல்வி குறித்து பேசிய பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷிகர் தவான்,  “ஷஷாங்க் மற்றும் அஷுதோஷ் இருவரும் தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடி வருவது மகிழ்ச்சியளிக்கிறது. இப்போட்டியில் நாங்கள் எதிரணியை குறைந்த ரன்களில் கட்டுப்படுத்தினோம் என்று நினைக்கிறேன். ஆனால் நாங்கள் பேட்டிங் செய்யும் போது முதல் 6 ஓவர்களில் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்த  தவறிவிட்டதுடன், அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை இழந்தோம். அங்குதான் நாங்கள் எங்கள் வெற்றியிலிருந்து பின் தங்கினோம். இறுதியில் அதற்கான விலையையும் நாங்கள் கொடுத்துவிட்டோம் என நினைக்கிறேன்.

இந்த பிட்ச்சில் பவுன்ஸ் இல்லாததால் பந்தினை கணித்து விளையாட முடியாமல் போனது. அதேபோன்று போட்டியின் கடைசி பந்தில் கேட்சை தவறவிட்டோம். இப்போட்டியில் நாங்கள் சரியாக ஃபீல்டிங் செய்திருந்தால் நிச்சயம் அவர்களை 10 முதல் 15 ரன்களை குறைவாக வைத்திருந்திருக்க முடியும். இது போன்ற சில தவறுகளால் தான் இந்த தோல்வி ஏற்பட்டது. இருப்பினும் எங்கள் அணியின் இளம் வீரர்கள் இத்தையக செயல்பட்டை வெளிப்படுத்துவதை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. அவர்களால் இப்போட்டியை முடிக்க முடிம் என்ற நம்பிக்கை கடைசி வரை இருந்தது. இது நாங்கள் இனி வரும் போட்டிகளில் சிறப்பாக செயல்படுவதற்கான உத்வேகத்தை வழங்கும்” என தெரிவித்துள்ளார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News