ஐபிஎல் 2024: விராட் கோலி அதிரடியில் தப்பிய ஆர்சிபி; கேகேஆர் அணிக்கு 183 ரன்கள் இலக்கு!

Updated: Fri, Mar 29 2024 21:10 IST
ஐபிஎல் 2024: விராட் கோலி அதிரடியில் தப்பிய ஆர்சிபி; கேகேஆர் அணிக்கு 183 ரன்கள் இலக்கு! (Image Source: Google)

17ஆவது சீசன் ஐபிஎல் தொடரானது இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்றுவரும் 10ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்திவருகின்றன.  பெங்களூருவிலுள்ள சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றுவரும் இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

இதையடுத்து களமிறங்கிய ஆர்சிபி அணிக்கு வழக்கம்போல் கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் - விராட் கோலி ஆகியோர் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் ஃபாஃப் டூ பிளேசிஸ் 8 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். அதன்பின் விராட் கோலியுடன் இணைந்த கேமரூன் க்ரீன் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி பவுண்டரியும், சிக்சர்களுமாக விளாசித்தள்ளினார். 

தொடர்ந்து இருவரும் அதிரடியாக விளையாட இவர்களது பார்ட்னர்ஷிப்பும் 50 ரன்களைக் கடந்தது. அதன்பின் அதிரடியாக விளையாடி வந்த கேமரூன் க்ரீன் 4 பவுண்டரி மற்றும் 2 சிக்சர்களை விளாசி 33 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதனைத்தொடர்ந்து களமிறங்கிய கிளென் மேக்ஸ்வெல் தனது பங்கிற்கு 3 பவுண்டரி, ஒரு சிக்சர் என 28 ரன்கள் மட்டுமே அடித்த நிலையில் சுனில் நரைன் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். 

இதற்கிடையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த விராட் கோலி இப்போட்டியிலும் அரைசதம் கடந்து அசத்தினார். அதேசமயம் மறுமுனையில் களமிறங்கிய ராஜத் பட்டிதார், அனுஜ் ராவத் ஆகியோரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை ஏமாற்றமளித்தனர். பின்னர் களமிறங்கிய தினேஷ் கார்த்தி இன்னிங்ஸின் 19ஆவது ஓவரில் அடுத்தடுத்து இரண்டு சிக்சர்களை விளாசி அசத்தினார். 

அதேசமயம் மறுபக்கம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த விராட் கோலி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி 4 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 83 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் ஆர்சிபி அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்களைச் சேர்த்தது. கேகேஆர் அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ஆண்ட்ரே ரஸல், ஹர்ஷித் ரானா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை