ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 63ஆவது லீக் போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து டு பிளெசிஸ் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தின.

Advertisement

மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதனையடுத்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரியான் ரிக்கெல்டன் மற்றும் ரோஹித் சர்மா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரோஹித் சர்மா 5 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தர். பின்னர் ரியான் ரிக்கெல்டனுடன் ஜோடி சேர்ந்த வில் ஜேக்ஸும் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. 

Advertisement

அதன்பின் 21 ரன்களைச் சேர்த்த கையோடு வில் ஜேக்ஸ் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து 25 ரன்களைச் சேர்த்திருந்த ரியான் ரிக்கெல்டனும் ஆட்டமிழந்தார். பின்னர் இணைந்த சூர்யகுமார் யாதவ் மற்றும் திலக் வர்மா இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தினர். மேற்கொண்டு இருவரும் இணைந்து 60 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த நிலையில் திலக் வர்மா 27 ரன்களில் தனது விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் ஹர்திக் பாண்டியாவும் அதிரடியாக விளையாடும் முயற்சியில் 3 ரன்களில் நடையைக் கட்டினார். 

இருப்பினும் மறுபக்கம் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியா சூர்யகுமார் யாதவ் தனது அரைசதத்தைப் பூர்த்தி செய்து அசத்தினார். அவருடன் இணைந்த நமன் தீரும் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினார். இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த சூர்யகுமார் யாதவ் 7 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 73 ரன்களையும், நமன் தீர் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 24 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்களைச் சேர்த்துள்ளது. டெல்லி கேப்பிட்டல்ஸ் தரப்பில் முகேஷ் குமார் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு ஃபாஃப் டூ பிளெசிஸ் மற்றும் கேஎல் ராகுல் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஃபாஃப் டூ பிளெசிஸ் 6 ரன்னிலும், கேஎல் ராகுல் 11 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழக்க, அடுத்து களமிறங்கிய அபிஷேக் போரலும் 6 ரன்களுடன் நடையைக் கட்டினார். அதன்பின் இணைந்த சமீர் ரிஸ்வி மற்றும் விப்ராஜ் நிகாம் இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் விக்கெட் இழப்பை தடுத்ததுடன், தேவைப்படும் நேரங்களில் பவுண்டரிகளை விளாசியும் அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 

அதன்பின் அதிரடியாக விளையாடி வந்த விப்ராஜ் நிகாம் 20 ரன்களிலும், அடுத்து வந்த டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 2 ரன்னிலும் என ஆட்டமிழந்தார். அவர்களைத்தொடர்ந்து 6 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 39 ரன்களை எடுத்திருந்த சமீர் ரிஸ்வியும் ஆட்டமிழந்தார். இதையடுத்து அணியின் கடைசி நம்பிக்கையாக பார்க்கப்பட்ட அஷுதோஷ் சர்மாவும் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 18 ரன்களில் விக்கெட்டை இழக்க, பின்னர் களமிறங்கிய வீரர்களும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதனால் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 18.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. 

Advertisement

Also Read: LIVE Cricket Score

மும்பை இந்தியன்ஸ் அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய மிட்செல் சான்ட்னர் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், நடப்பு ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கும் முன்னேறி அசத்தியுள்ளது. அதேசமயம் இப்போட்டியில் தோல்வியைத் தழுவிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News