ஐபிஎல் 2025: கேகேஆர் அணி தக்கவைக்கும் வீரர்களை கணித்துள்ள ஹர்பஜன் சிங்!
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தொடருக்கு முன்னதாக ஐபிஎல் அணிகள் கலைக்கப்பட்டு வீரர்களுக்கான மெகா ஏலமும் இந்தாண்டு டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது. இதனால் இந்த ஏலத்தில் எந்தெந்த வீரர்களை ஐபிஎல் அணிகள் தக்கவைக்கும் மற்றும் எந்தெந்த வீரர்களை தேர்வு செய்யும் என்ற எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.
இதன் ஒருபகுதியாக அடுத்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடருக்கு தற்போதில் இருந்தே ஐபிஎல் அணிகள் பணிகளை மேற்கொண்டு பல்வேறு மாற்றங்களை செய்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக அணியின் பயிற்சியாளர்களை மற்றுதல், புதிய பயிற்சியாளர்களை நியமித்தல், வீரர்களை ஒப்பந்தம் செய்தல் உள்ளிட்ட பணிகளில் ஐபிஎல் அணிகள் மும்முரமாக இறங்கியுள்ளனர். இதனால் எந்தெந்த வீரர்கள் எந்தெந்த அணியில் இடம்பிடிபார்கள் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் எதிர்வரும் ஐபிஎல் தொடரின் வீரர்கள் ஏலத்திற்கு முன்னதாக நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி எந்தெந்த வீரர்களை தக்கவைக்கும் என்பது குறித்து முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தனது கணிப்பை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், “நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் கேகேஆர் அணி முழு சீசனிலும் ஆதிக்கம் செலுத்தது. எனவே இந்தமுறை அந்த அணி யாரையும் விட்டுவிடுவது அல்லது தக்கவைப்பது என்பதை யோசிக்க கடினமாக இருக்கும்.
ஆனால் இது தக்கவைத்துக்கொள்ளும் விஷயம், எனவே நீங்கள் வரையறுக்கப்பட்ட வீரர்களை மட்டுமே தக்கவைக்க முடியும். என்னைப் பொறுத்தவரையில் கேகேஆர் அணி 6 வீரர்களை தக்கவைக்கும் என்று நினைக்கிறேன். அதன்படி, அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், பில் சால், சுனில் நரைன், ஆண்ட்ரே ரஸல் மற்றும் ரிங்கு சிங் ஆகியோர் ஏலத்திற்கு முன்னதாக கேகேஆர் அணியால் தக்கவைக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.
இதில் ரின்கு சிங்கை நான் நிச்சயம் தக்கவைக்க ஆசைப்படுவேன். மேலும் அவர் தக்கவைக்கப்படும் 5ஆவது வீரராக இருக்க வேண்டும். அதேசமயம் அந்த அணியால் கடைசியாக தக்கவைக்க கூடிய வீரராக நான் பார்ப்பது ரமந்தீப் சிங்கை தான். அவர் ஒரு சிறந்த ஆல்ரவுண்டராக வரக்கூடிய வீரர். மேலும் உள்ளூர் போட்டிகளிலும் அவர் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருவதன் காரணமாக, அவரைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்” என கூறியுள்ளார்.
Also Read: Funding To Save Test Cricket
ஹர்பஜன் சிங் கூறியதைப் போல் கேகேஆர் அணி தாக்கவைக்க கூடிய வீரர்களில் ஆண்ட்ரே ரஸல், சுனில் நரைன், ரிங்கு சிங் ஆகியோர் நிச்சயம் இருப்பார்கள் என்றாலும், ஸ்ரேயாஸ் ஐயரை அந்த அணி தக்கவைக்குமா என்ற சந்தேகங்கள் தொடர்ந்து எழுந்து வருகின்றனர். இதுதவிர உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டுள்ள ரமந்தீப் சிங்கை அந்த அணி தேர்வு செய்யும் பட்சத்தில் அது அந்த அணிக்கு மிகப்பெரும் பலமாக அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.