அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஜிம்பாப்வே அணி ஒரே ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளும் விளையாடும் முதல் டெஸ்ட் போட்டி இது என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்திருந்தன. அந்தவகையில் இன்று தொடங்கிய இப்போட்டியில் டாஸை வென்ற அயர்லாந்து அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய ஜிம்பாப்வே அணிக்கு ஜெய்லார்ட் கும்பி மற்றும் பிரின்ஸ் மஸ்வாரே இணை சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தனர். 

Advertisement

இதில் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 97 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஜெய்லார்ட் கும்பி 49 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அதேசமயம் மறுமுனையில் சிறப்பாக விளையாடி வந்த பிரின்ஸ் மஸ்வாரே தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். ஆனால் மறுமுனையில் களமிறங்கிய தியான் மேயர்ஸ் 10 ரன்களுக்கும், கேப்டன் கிரேய்க் எர்வின் 5 ரன்களிலும் என விக்கெட்டை இழக்க, அரைசதம் கடந்து விளையாடி வந்த பிரின்ஸ் மஸ்வாரேவும் தனது விக்கெட்டை இழந்தார். 

Advertisement

இதனையடுத்து களமிறங்கிய அனுபவ வீரர் சீன் வில்லியம்ஸ் ஒருபக்கம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், 35 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய பிரையன் பென்னட் 8 ரன்களிலும், கிளைவ் மடாண்டே ரன்கள் ஏதுமின்றியும், பிளெஸிங் முசரபானி 4 ரன்களுக்கும், ரிச்சர்ட் ந்ங்வாரா 5 ரன்களிலும், டெண்டாய் சடாரா ரன்கள் ஏதுமின்றியும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததன் காரணமாக ஜிம்பாப்வே அணியானது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 210 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

அயர்லாந்து அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய பேரி மெக்கர்தி மற்றும் ஆண்டி மெக்பிரையன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், மார்க் அதிர் 2 விக்கெட்டுகளையும், கிரெய்க் யங், கர்டிஸ் காம்பேர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். இதனையடுத்து அயர்லாந்து அணி முதல் இன்னிங்ஸைத் தொடங்க இருந்த நிலையில் மழை குறுக்கிட்டதன் காரணமாக ஆட்டம் தடைபட்டது. அதன்பின்னும் தொடர்ந்து மழை நீடித்த காரணத்தால் இப்போட்டியின் முதல் நாள் ஆட்டமானது முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து நாளை அயர்லாந்து அணி முதல் இன்னிங்ஸைத் தொடங்கவுள்ளது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News