நெதர்லாந்தில் நடைபெற்று வரும் முத்தரப்பு டி20 தொடரில் இன்று நடைபெற்ற 5ஆவது போட்டியில் அயர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற ஸ்காட்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து அயர்லாந்து அணியை பந்துவீச அழைத்தது. அதன்படி களமிறங்கிய ஸ்காட்லாந்து அணிக்கு இப்போட்டியில் எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. 

Advertisement

அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் ஹைர்ஸ் 9 ரன்களுக்கும், ஜார்ஜ் முன்ஸி 12 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தனர். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய மைக்கேல் ஜோஸ் 23 ரன்களிலும், கேப்டன் ரிச்சி பெர்ரிங்டன் 13 ரன்களுக்கும் என அடுத்தடுத்து ஆட்டமிழக்க அந்த அணி 64 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனையடுத்து இணைந்த மேத்யூ கிராஸ் மற்றும் மைக்கேல் லீஸ்க் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். 

Advertisement

பின்னர் 35 ரன்கள் எடுத்த நிலையில் மேத்யூ கிராஸும், 34 ரன்கள் எடுத்த நிலையில் மைக்கேல் லீஸ்க்கும் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்களாலும் ரன்களைச் சேர்க்க தடுமாறினர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் ஸ்காட்லாந்து அணியானது 8 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்களை மட்டுமே சேர்த்தது. அயர்லாந்து அணி தரப்பில் மார்க் அதிர் மற்றும் கிரேய்க் யங் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். 

அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய அயர்லாந்து அணிக்கு ஆண்ட்ரூ பால்பிர்னி மற்றும் கேப்டன் பால் ஸ்டிர்லிங் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் இணைந்து தொடக்கம் முதலே அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் முதல் 6 ஓவர்களில் 51 ரன்களைக் கடந்தது. அதன்பின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேப்டன் பால் ஸ்டிர்லிங் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 32 ரன்களில் ஆட்டமிழந்தார். 

இதையடுத்து பால்பிர்னியுடன் இணைந்த லோர்கன் டக்கரும் சிறப்பாக விளையாட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இப்போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் தங்கள் அரைசதங்களைப் பதிவுசெய்து அசத்தினர். பின்னர் 56 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் ஆண்ட்ரூ பால்பிர்னியும், 55 ரன்கள் எடுத்திருந்த நிலையில் லோர்கன் டக்கரும் விக்கெட்டுகளை இழந்தனர். 

பின்னர் களமிறங்கிய ஹாரி டெக்டர் 3 ரன்களுக்கும், கர்டிஸ் காம்பேர் ரன்கள் ஏதுமின்றியும் விக்கெட்டை இழந்தாலும், அயர்லாந்து அணியானது 19.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்து அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இப்போட்டியில் அரைசதம் கடந்து அணியின் வெற்றிக்கு உதவிய ஆண்ட்ரூ பால்பிர்னி ஆட்டநாயகன் விருதை வென்றார். 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News