இது மிகவும் பெருமையான தருணம் - டெஸ்ட் அறிமுகம் குறித்து கேஎஸ் பரத்!
ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்டுகள், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. டெஸ்ட் தொடர், இன்று முதல் தொடங்கியுள்ளது. நாகபுரியில் நடைபெற்று வரும் முதல் டெஸ்டில் டாஸ் வென்ற ஆஸி. அணி கேப்டன் கம்மின்ஸ், பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.
இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ், கேஎஸ் பரத் ஆகியோர் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அறிமுகமானார்கள். இந்திய டெஸ்ட் அணிக்கான தொப்பியை சூர்யகுமார் யாதவுக்கு ரவி சாஸ்திரியும் பரத்துக்கு புஜாராவும் வழங்கினார்கள். அதேபோல ஆஸ்திரேலிய அணியில் மர்பி அறிமுகமாகியுள்ளார்.
இந்நிலையில் சூர்யகுமார், பரத் ஆகியோரின் குடும்ப உறுப்பினர்கள், டெஸ்ட் ஆட்டத்தை நேரில் பார்க்க வந்துள்ளார்கள். டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அறிமுகமான இருவருக்கும் அவர்கள் வாழ்த்து தெரிவித்தார்கள். பரத்தின் தாய் தன் மகனுக்கு முத்தமிட்டு வாழ்த்து தெரிவித்தார்.
இந்நிலையில் தனது அறிமுக போட்டி குறித்து பேசிய கேஎஸ் பரத், “ஆரம்பித்த இடத்திலிருந்து பல வருடங்கள் பின்னோக்கிச் செல்வதில் மிகுந்த மகிழ்ச்சி. இங்கு நீண்ட நேரம் வந்து எனது (டெஸ்ட்) ஜெர்சியைப் பார்க்கிறேன். இது மிகவும் பெருமையான தருணம், நிறைய உணர்வுகள். இது எனது கனவு மட்டுமல்ல, நான் இந்தியாவுக்காக விளையாடுவதையும் இந்தியாவுக்காக சிறப்பாக செயல்படுவதையும் பலர் கனவு கண்டிருக்கிறார்கள்.
எனக்கு பின்னால் நிறைய கடின உழைப்பு, பல ஆண்டுகளாக எனது அணியினர், எனது குடும்பத்தினர், எனது மனைவி, எனது பெற்றோர், எனது நண்பர்கள், பயிற்சியாளர்கள் ஆகியோரிடமிருந்து நிறைய ஆதரவும் வலிமையும் உள்ளது. அவர்களின் ஆதரவு இல்லாவிட்டால், இன்று இந்த மேடையை நான் பகிர்ந்து கொள்வது சாத்தியமில்லை. எனக்குப் பின்னால் அவர்கள் வைத்திருந்த அனைத்தையும் சேர்த்து, இன்று நான் இருக்கும் இடத்திற்கு என்னைச் சென்றடையச் செய்ததற்காக அவர்களுக்கு நிறைய பெருமை சேரும் என்று நினைக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.