IND vs ENG: நான்காவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து பும்ராவுக்கு ஓய்வு; மீண்டும் விலகினார் கே எல் ராகுல்!

Updated: Tue, Feb 20 2024 22:50 IST
IND vs ENG: நான்காவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து பும்ராவுக்கு ஓய்வு; மீண்டும் விலகினா (Image Source: Google)

பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்ற நிலையில், இரண்டாவது போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்று அசத்தியது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்று முடிந்தது. 

இப்போட்டியில் இந்திய அணி ரோஹித் சர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், சர்ஃப்ராஸ் கான் ஆகியோரது அபாரமான பேட்டிங்கின் மூலம், ரவீந்திர ஜடேஜாவின் ஆல் ரவுண்டர் ஆட்டத்தின் மூலமாகவும் 434 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியதுடன், 2-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரிலும் முன்னிலைப் பெற்று அசத்தியுள்ளது. இதன் காரணமாக இந்திய அணி இத்தொடரை வெல்லும் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. 

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 23ஆம் தேதி ராஞ்சியில் நடைபெறவுள்ளது. இப்போட்டியிலும் இந்திய அணி வெற்றிபெறும் பட்சத்தில் இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், நான்காவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியிலிருந்து வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ராவுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தரப்பில் அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

ஜஸ்ப்ரித் பும்ரா, இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் 3 ஆட்டங்களிலும் விளையாடியதுடன் 17 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அணியின் துருப்புச்சீட்டாக இருந்தார். இந்நிலையில் அவரது பணிச்சுமையை கருத்தில் கொண்டு ராஞ்சி டெஸ்ட் போட்டியில் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் தசைப் பிடிப்பு காரணமாக 3ஆவது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகிய கேஎல் ராகுல் முழு உடற்தகுதியை எட்டாத நிலையில், நான்காவது டெஸ்ட் போட்டியிலிருந்தும் அவர் விலகியுள்ளார். 

முன்னதாக நான்காவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட ராகுல் தற்போது வரை கயத்திலிருந்து மீளாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவு, மேற்கொண்டு அவரது உடற்தகுதியின் அடிப்படையில் ஐந்தாவது போட்டியில் இடமளிக்கப்படும் என்றும் பிசிசிஐ அறிவித்துள்ளது. இதன் காரணமாக மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது அணியிலிருந்து விடுவிக்கப்பட்ட வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் குமார் மீண்டும் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் பிசிசிஐ தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

நான்காவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி: ரோஹித் சர்மா (கே), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மான் கில், ரஜத் பட்டிதார், சர்ஃப்ராஸ் கான், துருவ் ஜூரல், கேஎஸ் பரத், தேவ்தத் படிக்கல், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்ஸர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகேஷ் குமார், ஆகாஷ் தீப்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை