அயர்லாந்து தொடரில் கம்பேக் கொடுக்கும் பும்ரா; ரசிகர்கள் மகிழ்ச்சி!
இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா. கடந்த ஆண்டு அவருக்கு ஏற்பட்ட காயம் காரணமாக இந்திய அணியில் இடம்பிடிக்காமல் இருந்து வந்தார். இதையடுத்து லண்டனில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அந்த அறுவை சிகிச்சைக்கு பின் நீண்ட காலமாக ஓய்வில் இருந்தார். பின்னர் பயிற்சியை தொடங்குவதற்காக கடந்த ஏப்ரலில் தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு திரும்பினார்.
அங்கு என்சிஏ தலைவர் விவிஎஸ் லக்ஷ்மண் கண் பார்வையில் பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். இதனிடையே இந்திய அணி அடைந்த தோல்விகள், ரசிகர்களிடையே கடுமையான விரக்தியை ஏற்படுத்தியது. ஏனெனில் அவர் இல்லாததால் இந்திய அணி டி20 உலகக்கோப்பை, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் உள்ளிட்ட தொடர்களில் தோல்வியை சந்தித்தது. அதுமட்டுமல்லாமல் ஐபிஎல் தொடரிலிருந்து பும்ரா விலகியிருந்தார்.
இதனால் பும்ரா எப்போது மீண்டும் வருவார் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்ப தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் பும்ரா களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் அயர்லாந்து அணிக்கு எதிராக டி20 தொடரில் இந்திய அணி விளையாடவுள்ளது. அதனைத் தொடர்ந்து இந்திய அணி ஆசியக்கோப்பை, உலகக்கோப்பை உள்ளிட்ட தொடர்களில் பங்கேற்க உள்ளது.
இந்நிலையில் அயர்லாந்து தொடரின் மூலம் ஜஸ்ப்ரித் பும்ரா மீண்டும் கம்பேக் கொடுக்க உள்ளதாக வெளியான தகவலினால் இந்திய ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.