இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் துணை கேப்டன் பதவியை இழக்கும் ஜஸ்பிரித் பும்ரா?
ஜூன் மாதம் முதல் இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது நடைபெற உள்ளது. மேற்கொண்டு இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் ஒரு அங்கமாக நடைபெறவுள்ள காரணத்தால் இதன் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இத்தொடருக்கான இந்திய அணியில் எந்தெந்த வீரர்கள் இடம்பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. அதிலும் குறிப்பாக ரோஹித் சர்மா மீண்டும் கேப்டனாக செயல்படுவாரா, குல்தீப் யாதவிற்கு டெஸ்ட் அணியில் இடம் கிடைக்குமா, கருண் நாயர் டெஸ்ட் அணியில் கம்பேக் கொடுப்பாரா என பல்வேறு கேள்விகளுடன், நடப்பு ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்படும் வீரர்களுக்கு இடம் கிடைக்குமா என்ற சந்தேகங்களும் அதிகரித்துள்ளன.
இதற்கிடையில் இந்த முக்கியமான சுற்றுப்பயணத்திற்கு முன்னதாக, இந்திய அணி முகாமில் இருந்து ஒரு பெரிய செய்தி வந்துள்ளது.சமீபத்திய ஊடக அறிக்கைகளின்படி, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு துணை கேப்டன் பதவி வழங்கப்படாது என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேற்கொண்டு அனைத்து போட்டிகளுக்கும் தயாராக இருக்கும் வீரருக்கு துணைக்கேப்டன் பதவியை வழங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
முன்னதாக நடந்து முடிந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் இந்திய அணியின் துணைக்கேப்டனாக ஜஸ்பிரித் பும்ரா நியமிக்கப்பட்டிந்தார். மேற்கொண்டு ரோஹித் சர்மா பங்கேற்காத போட்டிகளுக்கு பும்ரா கேப்டனாகவும் செயல்பட்டு வந்தார். ஆனால் அத்தொடாரின் கடைசி போட்டியின் போது கேப்டனாக செயல்பட்டு வாந்த ஜஸ்பிரித் பும்ரா காயத்தை சந்தித்ததுடன் போட்டியில் இருந்தும் பாதியிலேயே வெளியேறினார்.
மேற்கொண்டு காயம் காரணமாக சாம்பியன்ஸ் கோப்பை தொடரையும் அவர் தவறவிட்டார். அப்போதே பும்ரா தொடர்ந்து விளையாடியதன் காரணமாகவே காயத்தை சந்தித்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்நிலையில் தான் இனிவரும் தொடர்களில் பும்ராவின் பணிச்சுமையைக் குறைக்கும் வகையில் அவரை அனைத்து போட்டிகளிலும் விளையாடவைப்பதற்கு பதிலாக முக்கிய ஆட்டங்களில் மட்டும் விளையாட பிசிசிஐ அனுமதிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாகவே அவரை டெஸ்ட் அணியின் துணைக்கேப்டன் பொறுப்பிலிருந்து விலக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதேசமயம் இந்திய ஒருநாள் அணியின் துணைக்கேப்டனாக செயல்பட்டுவரும் ஷுப்மன் கில்லை டெஸ்ட் அணியின் துணைக்கேப்டனாக நியமிக்க பிசிசிஐ திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் எதிர்வரும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரிலும் ஷுப்மன் கில்லை அணியின் துணைக்கேப்டனாக நியமிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Also Read: LIVE Cricket Score
இதுகுறித்து பிசிசிஐ வட்டாரங்களில் இருந்து வெளியான தாகவ்லின் படி, "ஐந்து டெஸ்ட் போட்டிகளுக்கும் தயாராக இருக்கும் ஒரு வீரர் எங்களுக்கு வேண்டும், அவருக்கு துணை கேப்டன் பதவி வழங்கப்பட வேண்டும். பும்ரா ஐந்து போட்டிகளிலும் விளையாட மாட்டார், எனவே வெவ்வேறு போட்டிகளுக்கு வெவ்வேறு துணை கேப்டன்களை நியமிக்க நாங்கள் விரும்பவில்லை. அதனால் கேப்டனும் துணை கேப்டனும் ஒன்றாக ஐந்து டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடுவதை நாங்கள் உறுதிசெய்ய வேண்டும்” என்று கூறியுள்ளனர்.