சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இருந்து ஜஸ்பிரித் பும்ரா விலகியது ஏன்?
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா எதிர்வரும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இருந்து விலகியுள்ளார். முன்னதாக ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடும் போது காயமடைந்த ஜஸ்பிரித் பும்ரா தனது காயத்தில் இருந்து முழுமையாக குணமடையாத காரணத்தால், அவர் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இருந்து விலகியாதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து அவருக்கு மாற்றாக இளம் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ரானா இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மேற்கொண்டு முன்னதாக இந்திய அணியில் இடம்பிடித்திருந்த யஷஸ்வி ஜெய்ஸ்வாலும் தற்போது அணியில் இருந்து நீக்கப்பட்டு, ரிஸர்வ் வீரர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதில் வருண் சக்ரவர்த்தி சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் ஜஸ்பிரித் பும்ரா முழு உடற்தகுதியை எட்டியதாகவும், இருப்பினும் அவரின் காயம் குறித்த அபாயம் காரணமாக இத்தொடருக்காக அவரை பணயம் வைக்க வேண்டாம் என்றும் தேர்வாளர்கள் முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான தகவலின் படி, பும்ரா ஐந்து வாரங்கள் ஓய்வெடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார், அதைத் தொடர்ந்து அவர் தேசிய கிரிக்கெட் அகாடமியில் தனது பயிற்சியை மேற்கொண்டு வந்தார்.
மேலும் வலிமை மற்றும் கண்டிஷனிங் பயிற்சியாளர் ரஜினிகாந்த் மற்றும் பிசியோ துளசியின் கீழ் பும்ரா தனது கீழ் முதுகில் ஏற்பட்ட காயத்திற்கு மறுவாழ்வு பெற்றவுடன், அவர் மருத்துவ ரீதியாக தகுதியானவர் என்று அறிவிக்கப்பட்டது.மேற்கொண்டு என்சிஏ தலைவர் நிதின் படேல் அனுப்பிய அறிக்கையில், அவர் தனது மறுவாழ்வை முடித்துவிட்டதாகவும், ஸ்கேன் அறிக்கைகள் நன்றாக இருப்பதாகவும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
இருப்பினும் அவரால் முழுமையாக பந்துவீசா முடியுமா என்பது குறித்து கேள்விகள் இருந்தன. இதனால் பும்ரா குறித்து இறுதி முடிவை தேர்வாளர்கள் எடுக்கட்டும் என்று கூறியதாகவும், அதன்பின் இந்திய அணியின் தலைமை தேர்வாளர் அஜித் அகர்கார், பும்ராவின் காயத்தை கருத்தில் கொண்ட இந்த முடிவை எடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்தே ஹர்ஷித் ரானா மாற்ற வீரராக அறிவிக்கப்பட்டதாகவும் அத்தகவல் தெரிவித்துள்ளது.
இருப்பினும் பும்ரா போன்ற ஒரு பந்துவீச்சாளர் சாம்பியன்ஸ் கோப்பை தொடரை தவறவிடுவது இந்திய அணியின் கேப்பை வெல்லும் கனவை தகர்த்துள்ளதாகவே பார்க்கப்படுகிறது. அணியில் ஷமி, அர்ஷ்தீப், ரானா உள்ளிட்டோர் இருந்தாலும் பும்ரா ஏற்படுத்தும் தாக்கத்தை இவர்களால் ஈடு செய்ய முடியுமா என்பது பெரும் கேள்வியாகவே உள்ளது. அதனால் பும்ரா இல்லாதது நிச்சயம் இந்திய அணிக்கு பெரும் சரிவை கொடுக்கும் என்ற விமர்சனங்களும் எழத்தொடங்கியுள்ளன.
Also Read: Funding To Save Test Cricket
சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மான் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், ஹார்திக் பாண்டியா, அக்ஸர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி, முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா, ஹர்ஷித் ராணா. ரிஸர்வ் வீரர்கள் - யஷஸ்வி ஜெய்ஸ்வால், முகமது ஷமி, ஷிவம் தூபே