மகளிர் ஒருநாள் தரவரிசை: ஜெமிமா, பிரதிகா முன்னேற்றம்!

Updated: Tue, Jan 14 2025 21:55 IST
Image Source: Google

அயர்லாந்து மகளிர் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு ஒருநாள் போட்டிகளின் முடிவில் இந்திய அணி அடுத்தடுத்து வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன் 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி நாளை நடைபெறவுள்ளது. 

இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மகளிர் ஒருநாள் போட்டிகளுக்கான புதுபிக்கப்பட்ட வீராங்கனைகள் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் பேட்டர்களுக்கான தரவரிசையில் தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் லாரா வோல்வார்ட் முதலிடத்தில் தொடர்கிறார். அவருக்கு அடுத்த இடத்தில் இலங்கை அணியின் சமாரி அத்தபத்துவும், இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவும் உள்ளனர். 

இந்நிலையில் இங்கிலாந்து தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஆஸ்திரேலிய வீராக்கனை அலிசா ஹீலி 4 இடங்கள் முன்னேறி 5ஆம் இடத்தைப் பிடித்துள்ளார். மேற்கொண்டு அயர்லாந்து அணி கேப்டன் கேபி லூயிஸ் 4 இடங்கள் முன்னேறி 16ஆவது இடத்திற்கும், இந்திய வீராங்கனைகள் ஜெமிமா ரோட்ரிக்ஸ் 3 இடங்கள் முன்னேறி 19ஆம் இடத்தையும், பிரதிகா ராவல் 52 இடங்கள் முன்னேறி 65ஆம் இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளனர்.

மகளிர் ஒருநாள் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் இங்கிலாந்து வீராங்கனை சோஃபி எக்லெஸ்டோன் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறார். அவரைத்தொடர்ந்து ஆஸ்திரேலிய அணியின் ஆஷ்லே கார்ட்னர் ஒரு இடம் முன்னேறி இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ள நிலையில், முன்னதாக இரண்டாம் இடத்தில் இருந்த ஆஸ்திரேலிய அணியின் மேகன் ஷாட் ஒரு இடம் பின் தங்கி மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

Also Read: Funding To Save Test Cricket

இந்த பட்டியலில் தென்  ஆப்பிரிக்க வீராங்கனை மரிஸான் கேப் நான்காம் இடத்திலும், இந்திய வீராங்கனை தீப்தி சர்மா 5ஆம் இடத்திலும் தொடரும் நிலையில், ஆஸ்திரேலிய அணியின் கிம் கார்த் 3இடங்கள் முன்னேறி டாப்10ல் நுழைந்துள்ளார். இதுதவிர்த்து இந்திய அணி வீராங்கனைகள் ரேனுகா சிங் தாக்கூர், அருந்ததி ரெட்டி, பூஜா வஸ்திரேகர் உள்ளிட்டோர் பின்னடைவைச் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை