விராட், ரோஹித் ஃபார்மை 2024 ஐபிஎல் தொடரில் சோதித்து விட்டு வாய்ப்பு கொடுக்கலாம் - கெவின் பீட்டர்சன்!
இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் தற்போது 35 வயது கடந்து விட்டனர். அதனால் அவர்களை கொஞ்சம் கொஞ்சமாக ஓரம் கட்ட வேண்டும் என்று மறைமுகமாக கருதும் பிசிசிஐ அதற்கான வேலையை முதலாவதாக டி20 கிரிக்கெட்டில் தொடங்கியுள்ளது. அதற்கேற்றார் போல் 2022 டி20 உலகக் கோப்பையில் இந்தியா தோற்க ரோஹித், அஸ்வின், தினேஷ் கார்த்திக் போன்ற சீனியர்கள் முக்கிய காரணமாக அமைந்தனர்.
இதனால் காலம் கடந்த அவர்களை கழற்றி விட்டு ஹர்திக் பாண்டியா தலைமையில் 2024 டி20 உலகக் கோப்பையில் புதிய இளம் அணியை களமிறக்குவதற்கான வேலையை பிசிசிஐ மற்றும் தேர்வு குழுவினர் கடந்த வருடமே தொடங்கினார்கள். அதன் காரணத்தால் என்னவோ தெரியவில்லை 2022 டி20 உலகக் கோப்பைக்கு பின் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் மேற்கொண்டு இதுவரை ஒரு டி20 போட்டியில் கூட இந்தியாவுக்காக விளையாடாமல் இருந்து வருகின்றனர்.
ஆனால் 2023 உலகக் கோப்பையில் நிறைய இளம் வீரர்களுக்கு சவால் விடும் வகையில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் பெரிய ரன்கள் குவித்து இந்தியாவின் வெற்றிக்கு முழு மூச்சுடன் போராடினார்கள். அதன் காரணமாக இன்னும் 6 மாதத்தில் நடைபெறும் டி20 உலக கோப்பையில் அவர்கள் கண்டிப்பாக விளையாட வேண்டும் என்று நிறைய முன்னாள் வீரர்கள் தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக அழுத்தமான தொடரில் வெற்றி பெறுவதற்கு இளம் வீரர்களை மட்டும் சார்ந்திருக்க முடியாது என்று வாசிம் அக்ரம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் இந்தியாவுக்காக 2024 டி20 உலகக் கோப்பையில் விளையாடுவதற்கு உரிமையுடையவர்கள் என்று கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார். இருப்பினும் அவர்களின் ஃபார்மை 2024 ஐபிஎல் தொடரில் சோதித்து விட்டு வாய்ப்பு கொடுக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “ரோஹித் மற்றும் விராட் ஆகியோர் விளையாடுவதற்கு அனைத்து வாய்ப்புகளும் இருக்கிறது. அதே சமயம் அவர்கள் ஐபிஎல் தொடரில் எப்படி செயல்படுகிறார்கள் என்பதை பார்க்க வேண்டும். அவர்களை அங்கே சோதித்துப் பாருங்கள். ஏனெனில் அவர்கள் இந்திய கிரிக்கெட்டின் மிகச்சிறந்த வேலைக்காரர்கள். அவர்களுக்கு நீங்கள் மரியாதை கொடுக்க வேண்டும்.
குறிப்பாக உங்களின் ஃபார்மை வைத்து வாய்ப்பு கொடுக்கலாமா இல்லையா என்பதை அவர்களிடமே நீங்கள் கேட்க வேண்டும். அவர்கள் மகத்தான கிரிக்கெட்டர்கள்” என்று கூறியுள்ளார். முன்னதாக சமீபத்தி ஐபிஎல் தொடர்களில் விராட் கோலி வழக்கம் போல அசத்தி வரும் நிலையில் ரோஹித் சர்மா மட்டுமே கடந்த வருடம் அதிக முறை டக் அவுட்டாகி மோசமான சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.