வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடருக்கான இங்கிலாந்து அணியில் இருந்து ஜோஸ் பட்லர் விலகல்!

Updated: Mon, Oct 21 2024 22:25 IST
Image Source: Google

இங்கிலாந்து அணி சமீபத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடியது. இதில் டி20 தொடரை 1-1 என்ற கணக்கில் சமன்செய்த இங்கிலாந்து அணியானது, ஒருநாள் தொடரில் 2-3 என்ற கணக்கில் தோல்வியைத் தழுவியது. 

இந்நிலையில் இங்கிலாந்து அணி அடுத்ததாக வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடவுள்ளது. அதன்படி அக்டோபர் 31ஆம் தேதி தொடங்கும் இத்தொடரானது நவம்பர் 17ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கான 14 பேர் அடங்கிய இங்கிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அறிவித்தது.

அதன்படி காயம் காரணமாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் இருந்து விலகிய ஜோஸ் பட்லர் தற்போது காயத்தில் இருந்து மீண்டுள்ளதுடன், அணியின் கேப்டனாகவும் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டது. மேற்கொண்டு அறிமுக சுழற்பந்து வீச்சாளர் ஜாஃபர் சோஹனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம் ஆஸ்திரேலிய தொடருக்கான இங்கிலாந்து அணியில் இடம்பிடித்தும் வாய்ப்பு கிடைக்காமல் இருந்த ஜான் டர்னர், டேன் மௌஸ்லி ஆகியோருக்கு இத்தொடரிலும் வாய்ப்பு கிடைத்துள்ளது. 

இநிலையில் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இங்கிலாந்து ஒருநாள் அணியில் இருந்து கேப்டன் ஜோஸ் பட்லர் காயம் காரணமாக விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் டி20 அணிக்கான கேப்டனாக ஜோஸ் பட்லர் தொடர்வார் என்றும், அவருக்கு மாற்றாக அறிமுக வீரர் மைக்கேல் பெப்பர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதுடன், ஒருநாள் தொடரில் இங்கிலாந்து அணியை லியாம் லிவிங்ஸ்டோன் வழிநடத்துவார் என்றும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. 

இங்கிலாந்து அணி: ஜோஸ் பட்லர் (கேப்டன், டி20 தொடரில் மட்டும்), ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜேக்கப் பெத்தேல், ஜாஃபர் சோஹன், சாம் கரன், வில் ஜாக்ஸ், லியாம் லிவிங்ஸ்டோன் (ஒருநாள் அணி கேப்டன்), சாகிப் மஹ்மூத், டான் மௌஸ்லி, ஜேமி ஓவர்டன், ஆதில் ரஷித், பில் சால்ட், ரீஸ் டாப்லி, ஜான் டர்னர், மைக்கேல் பெப்பர் (ஒருநாள் அணி).

Also Read: Funding To Save Test Cricket

வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து போட்டி அட்டவணை

  • முதல் ஒருநாள் போட்டி: ஆன்டிகுவா,  31 அக்டோபர்
  • 2ஆவது ஒருநாள் போட்டி: ஆன்டிகுவா, நவம்பர் 2 
  • 3ஆவது ஒருநாள் போட்டி: பார்படாஸ் - நவம்பர் 6
  • முதல் டி20: பார்படாஸ் - நவம்பர் 9
  • 2ஆவது டி20: பார்படாஸ் - நவம்பர் 10
  • 3ஆவது டி20: செயின்ட் லூசியா - நவம்பர் 14
  • 4ஆவது டி20: செயின்ட் லூசியா - நவம்பர் 16
  • 5ஆவது டி20: செயின்ட் லூசியா - நவம்பர் 17
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை