எல்எல்சி 2023: மிஸ்பா அரைசதம்; மகாராஜாஸுக்கு 166 டார்கெட்!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரைப்போல் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் லெஜண்ட்ஸ் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் கத்தாரிலுள்ள தோஹாவில் இன்று தொடங்கியது. இதன் முதல் லீக் ஆட்டத்தில் இந்தியா மஹாராஜாஸ் அணி, ஆசிய லையன்ஸ் அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ஆசிய லையன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய அந்த அணியில் திலகரத்னே தில்சன் 5 ரன்களிலும், ஆஸ்கர் ஆஃப்கான் ஒரு ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதையடுத்து ஜோடி சேர்ந்த உபுல் தரங்கா - மிஸ்பா உல் ஹக் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மிஸ்பா உல் ஹக் அரைசதம் கடந்தார்.
அதன்பின் அரைசதம் கடப்பார் என எதிர்பார்க்கப்பட்ட உபுல் தரங்கா 40 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, மறுமுனையில் அதிரடியாக விளையாடிய மிஸ்பா உல் ஹக் 50 பந்துகளில் 2 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 73 ரன்களுக்கு தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் வந்த ஷாகித் அஃப்ரிடி, திசாரா பெரேரா, அப்துல் ரஸாக் ஆகியோர் ஓரளவு ரன்களைச் சேர்த்தனர்.
இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் ஆசிய லையன்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்களைச் சேர்த்துள்ளது. இந்தியா தரப்பில் பர்விந்தர் அவானா, ஸ்டூவர்ட் பின்னி தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.