எல்எல்சி 2024: குஜராத் கிரேட்ஸை வீழ்த்திய சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ்!
லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 6ஆவது லீக் ஆட்டத்தில் சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ் மற்றும் குஜராத் கிரேட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு வேன் வைக் - கேப்டன் ஷிகர் தவான் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் வேன் வைக் 9 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய லிண்டல் சிம்மன்ஸ் 8 ரன்களுக்கும், முகமது கைஃப் 10 ரன்களுக்கும் என அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினர். இதற்கிடையில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஷிகர் தவான் 38 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.
அதன்பின்னர் களமிறங்கிய வீரர்களும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் குஜராத் கிரேட்ஸ் அணியானது 7 விக்கெட்டுகளை இழந்து 123 ரன்களை மட்டுமே சேர்த்தது. சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ் அணி தரப்பில் சுபோத் பாட்டி 2 விக்கெட்டுகளையும், ஹமித், ரஸாக், பவன் நெகி மற்றும் ஜெசல் கரியா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றி அசத்தினர்.
இதனையடுத்து எளிய இலக்கை நோக்கி விளையாடிய சூப்பர் ஸ்டார்ஸ் அணிக்கு மார்ட்டின் கப்தில் மற்றும் ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அதிரடியாக தொடங்கிய மார்ட்டின் கப்தில் 14 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அதன்பின் கோஸ்வாமியுடன் இணைந்த ஹாமில்டன் மஸகட்ஸாவும் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது.
Also Read: Funding To Save Test Cricket
அதன்பின் 4 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 41 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் மஸகட்ஸா தனது விக்கெட்டை இழக்க, மறுபக்கம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கோஸ்வாமி 6 பவுண்டரிகளுடன் 48 ரன்களையும், பவன் நெகி 19 ரன்களையும் சேர்க்க, சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ் அணி 14.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் கிரேட்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவு செய்து அசத்தியது.