இலங்கையின் உள்ளூர் டி20 கிரிக்கெட் தொடரான லங்கா பிரீமியர் லீக் டி20 தொடரின் 5ஆவது சீசன் நேற்று கோலாகலமாக தொடங்கியது. இத்தொடரில் இன்று நடைபெற்ற இரண்டாவது லீக் ஆட்டத்தில் ஜாஃப்னா கிங்ஸ் மற்றும் கலே மார்வெல்ஸ் இணை பலப்பரீட்சை நடத்தின. பல்லகலேவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஜாஃப்னா கிங்ஸ் அணியானது பேட்டிங் செய்வதாக அறிவித்து கலே அணியை பந்துவீச அழைத்தது.
இதையடுத்து களமிறங்கிய ஜாஃப்னா அணியில் குசால் மெண்டிஸ் 4 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் இணைந்த பதும் நிஷங்கா - அவிஷ்கா ஃபெர்னாண்டோ இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்ததுடன், இரண்டாவது விக்கெட்டிற்கு 80 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர்.
அதன்பின் 51 ரன்கள் எடுத்திருந்த நிஷங்கா விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ரைலீ ரூஸோவ் ஒரு ரன்னிலும், 59 ரன்கள் எடுத்திருந்த அவிஷ்கா ஃபெர்னாண்டோவும் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த சரித் அசலங்கா 33 ரன்களையும், தனஞ்செயா டி சில்வா 18 ரன்களிலும் என ஆட்டமிழந்தனர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் ஜாஃப்னா கிங்ஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்களைச் சேர்த்தது. கலே அணி தரப்பில் ஸஹூர் கான் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனையடுத்து கடின இலக்கை நோக்கி விளையாடிய கலே மார்வெல்ஸ் அணிக்கு கேப்டன் நிரோஷன் டிக்வெல்லா மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தனர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 66 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைந்த நிலையில் கேப்டன் நிரோஷன் டிக்வெல்லா 47 ரன்களில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
அதன்பின் களமிறங்கிய டிம் செய்ஃபெர்ட் 10 ரன்களில் நடையைக் கட்ட, மறுமுனையில் அரைசதம் கடந்து விளையாடி வந்த அலெக்ஸ் ஹேல்ஸ் 65 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய பனுகா ராஜபக்க்ஷா 13 ரன்களையும், ஜனித் லியானகே 25 ரன்களையும் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தனர். இதனால் அந்த அணி 173 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்திருந்தது.
இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டுவைன் பிரிட்டோரியஸ் 9 ரன்களையும், சஹான் அராச்சிகே 5 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் கலே மார்வெல்ஸ் அணியானது கடைசி பந்தில் இலக்கை எட்டியதுடன் 5 விக்கெட் வித்தியாசத்தில் ஜாஃப்னா கிங்ஸ் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இப்போட்டியில் அரைசதம் அடித்து அணியின் வெற்றிக்கு உதவிய அலெக்ஸ் ஹேல்ஸ் ஆட்டநாயகன் விருதை வென்றார்.