இலங்கையில் நடைபெற்றுவரும் 5ஆவது சீசன் லங்கா பிரீமியர் லீக் தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இன்றுந் நடைபெற்ற 19ஆவது லீக் போட்டியில் கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் மற்றும் கலே மார்வெல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து கலே மார்வெல்ஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய மார்வெல்ஸ் அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. அணியின் தொடக்க வீரர்கள் கேப்டன் நிரோஷன் டிக்வெல்லா 10 ரன்களிலும், அலெக்ஸ் ஹேல்ஸ் 3 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர்.
அதன்பின் களமிறங்கிய சதீஷா ராபகக்ஷாவும் 15 ரன்களுடன் நடையைக் கட்டினார். அதன்பின் இணைந்த டிம் செய்ஃபெர்ட் - பனுகா ராஜபக்க்ஷா இனை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர். இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட பனுகா ராஜபக்க்ஷா ஒரு பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 35 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டிம் செய்ஃபெர்ட்டும் 3 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 44 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டனர்.
இதனையடுத்து களமிறங்கிய சஹான் அராச்சிகே 12 ரன்களிலும், ஜனித் லியானகே 13 ரன்களுக்கும் என விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்களும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இதன் காரணமாக கலே மார்வெல்ஸ் அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துடன் 138 ரன்களில் ஆல் அவுட்டானது. கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய மதீஷா பதிரானா 4 விக்கெட்டுகளையும், துனித் வெல்லலாகே மற்றும் ஷதாப் கான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணிக்கு ரஹ்மனுல்ல குர்பாஸ் மற்றும் ஏஞ்சலோ பெரேரா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஏஞ்சலோ பெரேரா 11 ரன்களுக்கும், ரஹ்மனுல்லா குர்பாஸ் 23 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் இணைந்த முஹ்மது வசீம் - கிளென் பிலீப்ஸ் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய முஹ்மது வசீம் தனது அரைசதத்தைப் பதிவுசெய்த கையோடு 4 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 50 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கிளென் பிலீப்ஸ் 31 ரன்களையும், சதீரா சமரவிக்ரமா 15 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணி 18.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் கலே மார்வெல்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணியானது நடப்பு சீசன் லங்கா பிரீமியர் லீக் தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. மேலும் இப்போட்டியில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய மதீஷா பதிரானா ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.