இலங்கையில் நடைபெற்று வரும் லங்கா பிரீமியர் லீக் டி20 தொடரின் 5ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 16ஆவது லீக் ஆட்டத்தில் தம்புளா சிக்ஸர்ஸ் மற்றும் கலே மார்வெல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற சிக்ஸர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய கலே மார்வெல்ஸ் அணிக்கு கேப்டன் நிரோஷன் டிக்வெல்லா மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் கேப்டன் நிரோஷன் டிக்வெல்லா 7 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார்.
அதன்பின் அலெக்ஸ் ஹேல்ஸுடன் இணைந்த டிம் செய்ஃபெர்ட்டும் பொறுப்புடன் விளையாட அணியின் ஸ்கோரும் உயர்ந்தது. அதன்பின் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட அலெக்ஸ் ஹேல்ஸ் 38 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து பனுகா ராஜபக்ஷா ஒரு ரன்னிலும், டிம் செய்ஃபெர்ட் 28 ரன்களிலும் என ஆட்டமிழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த ஜனித் லியானகே - ஷஹான் ஆரச்சிகே இருவரும் ஓரளவு தாக்குப்பிடித்து ஸ்கோரை உயர்த்தினர். ஆனால் இதில் லியானகே 13 ரன்களுக்கும், ஷஹான் 15 ரன்களிலும் என ஆட்டமிழந்தனர்.
பின்னர் களமிறங்கிய வீரர்களில் டுவைன் பிரிட்டோரியஸ் 16 ரன்களைச் சேர்த்ததைத் தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் கலே மார்வெல்ஸ் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 148 ரன்களை மட்டுமே எடுத்தது. தம்புளா சிக்ஸர்ஸ் அணி தரப்பில் நுவான் பிரதீப், துஷான் ஹெமந்தா, கேப்டன் முகமது நபி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய தம்புளா சிக்ஸர் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியளிக்கும் வகையில் குசால் பெரேரா முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்தார்.
அதன்பின் இணைந்த ரீஸா ஹென்றிக்ஸ் மற்றும் இப்ராஹிம் ஸத்ரான் இணை பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இப்ராஹிம் ஸத்ரான் 30 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய லஹிரு உதானா 12 ரன்களிலும், மார்க் சாப்மேன் 4 ரன்களுக்கும், சமிந்து விக்ரமசிங்கே 4 ரன்களுக்கும் என அடுத்தடுத்து ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். இருப்பினும் மறுபக்கம் தொடக்க வீரராக களமிறங்கி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரீஸா ஹென்றிக்ஸ் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
பின் 6 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 72 ரன்கள் சேர்த்த நிலையில் ரீஸா ஹென்றிக்ஸ் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அதிரடியாக விளையாடிய கேப்டன் முகமது நபி 25 ரன்களைச் சேர்த்தார். இதனால் கடைசி பந்தில் அந்த அணி வெற்றிக்கு ஒரு ரன் தேவை என்ற நிலையில், அதனை எதிர்கொண்ட முகமது நபி சிங்கிள் எடுக்க முயற்சி செய்ய ரன் அவுட்டாகினார். இதன் காரணமாக இப்போட்டியானது சூப்பர் ஓவருக்கு சென்றது. இதனையடுத்து சுப்பர் ஓவரில் முதலில் பேட்டிங் செய்த தம்புளா சிக்ஸர்ஸ் அணியானது முதல் 5 பந்துகளிலேயே 2 விக்கெட்டுகளை இழந்து 6 ரன்களை மட்டுமே எடுத்தது.
இதனையடுத்து 7 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கலே மேர்வெல்ஸ் அணிக்கு அலெக்ஸ் ஹேல்ஸ் அதிரடியாக விளையாடியதுடன் பவுண்டரி, சிக்ஸரை விளாசி வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் கலே மார்வெல்ஸ் அணியானது சூப்பர் ஓவரில் தம்புளா சிக்ஸர்ஸ் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இப்போட்டியில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி மகேஷ் தீக்ஷனா ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.