அக்சர் படேலை ஏன் ஒன்பதாவது இடத்தில் களமிறக்கினார்கள்? - சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கேள்வி!
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி நான்கு போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கோப்பை தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் முதல் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி அபார வெற்றியைப் பெற்ற நிலையில், மூன்றாவது டெஸ்ட் போட்டி இந்தூரில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இந்திய அணி 109/10 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது.
பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் உஸ்மான் கவாஜா (60) அரை சதம் அடித்ததால், அந்த அணி முதல் நாள் முடிவில் 156/4 என இருந்தது. இதனைத் தொடர்ந்து இரண்டாவது நாள் முதல் செஷனில் இந்திய ஸ்பின்னர்கள் மிரட்டலாக செயல்பட்டதால், அந்த அணி 197/10 ஆல்அவுட் ஆனது. இதனைத் தொடர்ந்து 88 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை துவங்கிய இந்திய அணியில் ரோஹித் ஷர்மா (12), கில் (5), கோலி (13), ஷ்ரேயஸ் ஐயர் (26) போன்ற முன்னணி பேட்டர்கள் சொதப்பிய நிலையில், இறுதியில் சேத்தேஸ்வர் புஜாரா தனியொருவனாக நின்று 59 (142) ரன்களை குவித்து அசத்தினார்.
இதனால், இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 163/10 ரன்களை மட்டும் சேர்த்து, ஆஸ்திரேலிய அணிக்கு 76 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்துள்ளனர். நாதன் லைன் அபாரமாக பந்துவீசி 8 விக்கெட்களை சாய்த்து அசத்தினார். இந்நிலையில், இந்திய அணி இப்படி இக்கட்டான நிலையை எட்ட காரணம் என்ன என்பது குறித்து பேசியுள்ளார்.
அதில், “எனக்கு புரியவே இல்லை. இரண்டாவது இன்னிங்ஸின்போது அக்சர் படேலை ஏன் ஒன்பதாவது இடத்தில் களமிறக்கினார்கள்? இந்த டெஸ்ட் தொடரில் அவர் மட்டும்தான் தொடர்ச்சியாக ரன்களை அடித்து வருகிறார். 84, 74, 12*, 13* இப்படி சிறப்பாக செயல்பட்டிருக்கும் வீரரை 5ஆவது இடத்தில் கூட களமிறக்கியிருக்கலாம். இது அக்சர் படேலை அவமானப்படுத்தியற்கு சமம்.
அவரை முன்கூட்டியே களமிறக்கியிருந்தால் அரை சதமாவது எடுத்திருப்பார். முதல் இரண்டு போட்டிகளிலும் அக்சர் படேலை இப்படி 9ஆவது இடத்தில் களமிறக்கியிருந்தால், இந்தியா தோல்வியைத்தான் சந்தித்திருக்கும். தேவையில்லாமல் ரோஹித் தவறு செய்துவிட்டார். அக்சர் படேலை 5,6,7 ஆகிய இடங்களிலாவது களமிறக்கியிருக்க வேண்டும். இந்திய அணி பெரிய தவறை செய்துவிட்டது” என்று தெரிவித்துள்ளார்.