ஆஸ்திரேலிய அணியின் அதிரடி விக்கெட் கீப்பர் பேட்டராக அறியப்பட்டவர் மேத்யூ வேட். கடந்த சில ஆண்டுகளாக ஆஸ்திரேலிய ஒருநாள் அணி மற்றும் டி20 அணியில் அவருக்கு போதிய வாய்ப்புகள் வழங்கப்படுவதில்லை. மேலும் நடந்து முடிந்த ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய அணியிலும் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. 

Advertisement

சமீபத்தில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான ஆஸ்திரேலிய அணிகளில் பல்வேறு நட்சத்திர வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்ட நிலையிலும், மேத்யூ வேடிற்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. இதனால் எதிர்வரும் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய அணியிலும் அவருக்கு இடம் கிடைக்காது என கூறப்பட்டது. இதையடுத்து தான் மேத்யூ வேட் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்துள்ளார். 

Advertisement

சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வை அறிவித்துள்ள மேத்யூ வேட், ஆஸ்திரேலிய அணியின் ஃபில்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதன்மூலம் எதிர்வரும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான தொடர் முதல் மேத்யூ வேட் ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளராக செயல்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த கையோடு அணியின் பயிற்சியாளர் குழுவில் மேத்யூ வேட் இணைந்துள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது. 

இந்நிலையில் தனது ஓய்வு முடிவு குறித்து பேசியுள்ள மேத்யூ வேட், “கடந்த டி20 உலகக் கோப்பை தொடரின் முடிவின் போதே எனது சர்வதேச கிரிக்கெட் வழ்க்கை முடிந்துவிட்டதாக நான் முழுமையாக அறிந்தேன். மேலும் கடந்த ஆறு மாதங்களாகவே ஜார்ஜ் பெய்லி மற்றும் பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டோனால்ட் ஆகியோருடன் எனது ஓய்வு முடிவு குறித்து, பயிற்சியாளராக செயல்பட விரும்புவதையும் நான் கூறினேன். ஏனெனில் கடந்த சில வருடங்களாக பயிற்சியாளராக மாற நான் ஆர்வமுடன் இருந்தேன். 

அதிர்ஷ்டவசமாக தற்போது அதற்கான சில சிறந்த வாய்ப்புகள் வந்துள்ளன, அதற்காக நான் மிகவும் நன்றியுடனும் உற்சாகத்துடனும் இருக்கிறேன். அதேசமயம் நான் தொடர்ந்து பிக்பேஷ் லீக் தொடரிலும், மற்ற டி20 தொடர்களிலும் விளையாடுவேன். ஒரு வீரராக அணிக்கு எவ்வளவு பங்களிப்பேனோ அதே அளவும் பங்களிப்பை எனது பயிற்சியாளர் பதவியிலும் நான் கொடுப்பேன் என்பதிலும் உறுதியுடன் இருக்கிறேன்.

எனது சர்வதேச வாழ்க்கை முடிவடையும் நிலையில், எனது ஆஸ்திரேலிய அணி வீரர்கள், ஊழியர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். சர்வதேச அளவில் ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடியது சவாலானதாக இருந்தது. என்னைச் சுற்றி நல்ல மனிதர்கள் இல்லாமல், என்னால் எதையும் செய்திருக்க முடியாது. அதனால் எனக்கு ஆதரவு கொடுத்த அனைவருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார். 

Advertisement

ஆஸ்திரேலிய அணிக்காக கடந்த 2011ஆம் ஆண்டு அறிமுகமாக மேத்யூ வேட், 36 டெஸ்ட் போட்டிகளில் 4 சதங்கள், 5 அரைசதங்கள் என 1613 ரன்களையும், 97 ஒருநாள் போட்டிகளில் விளையாடி ஒரு சதம், 11 அரைசதங்கள் என 1867 ரன்களையும், 92 டி20 போட்டிகளில் விளையாடி 3 அரைசதங்களுடன் 1202 ரன்களையும் சேர்த்துள்ளார். இதுதவிர்த்து ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் டைட்டைன்ஸ் அணி மொத்தமாக 15 போட்டிகளில் மட்டுமெ விளையாடியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தாக்கது

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News