அரையிறுதிக்கு தேவையான அனைத்து திட்டங்களும் உள்ளன - ராகுல் டிராவிட்!

Updated: Mon, Nov 13 2023 23:02 IST
Image Source: Google

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் முடிவில் இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா மற்றும் நியூசிலாந்து ஆகிய நான்கு அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றன. இதில் நடைபெற இருக்கு முதல் அரையிறுதி போட்டியில் புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் இந்திய அணியும், நான்காவது இடத்தில் இருக்கும் நியூசிலாந்து அணியும் பலப்பரீட்சை மேற்கொள்ள உள்ளன.

கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி போட்டியிலும் நியூசிலாந்து அணியை எதிர்கொண்ட இந்திய அணி, நியூசிலாந்து அணியிடம் 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த முறையும் இந்திய அணி அரையிறுதியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்ள உள்ளதால், இந்தியா – நியூசிலாந்து இடையேயான அரையிறுதி போட்டி மீது அதிகமான எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்தநிலையில், நியூசிலாந்து அணியுடனான அரையிறுதி போட்டி குறித்து பேசியுள்ள இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான ராகுல் டிராவிட், அரையிறுதி போட்டிக்கு தேவையான அனைத்து திட்டங்களும் தங்களிடம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய ராகுல் டிராவிட், “நாங்கள் இதுவரை விளையாடியுள்ள போட்டிகளை போன்று அரையிறுதி போட்டியும் சாதரண போட்டி தான். அரையிறுதி போட்டி என்பதால் நிச்சயம் அழுத்தம் இருக்கும், ஆனால் இந்திய வீரர்கள் அழுத்தங்களை மிக சிறப்பாக கையாண்டு வருகிறார்கள். நியூசிலாந்து அணியுடனான போட்டிக்கு தேவையான அனைத்து திட்டங்களும் எங்களிடம் உள்ளது. 

கடந்த போட்டிகளை போலவே அரையிறுதி போட்டியையும் எதிர்கொள்வோம். எங்கள் வீரர்கள் அதிகமான நம்பிக்கையுடனும், புத்துணர்சியுடன் இருக்கிறார்கள். இந்திய அணியின் மிடில் ஆர்டர் வலுவானதாக உள்ளது. சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயஸ் ஐயர், கே.எல் ராகுல் அனைவரும் பேட்டிங்கில் தங்களது வேலையை சரியாக செய்து வருகின்றனர்” என்று தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை