இந்திய அணி பயமின்றி விளையாட வேண்டும் - வீரேந்திர சேவாக்!

Updated: Wed, Nov 15 2023 13:12 IST
இந்திய அணி பயமின்றி விளையாட வேண்டும் - வீரேந்திர சேவாக்! (Image Source: Google)

ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று மதியம் 2 மணிக்கு மும்பையில் நடைபெறும் முதல் அரையிறுதியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. அதில் லீக் சுற்றில் தோல்வியை சந்திக்காமல் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த இந்தியா 4ஆவது இடத்தை பிடித்த நியூசிலாந்தை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு செல்லுமா என்ற ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

இருப்பினும் 2013க்குப்பின் ஐசிசி தொடர்களில் இதே போல லீக் சுற்றில் அசத்தும் இந்தியா நாக் அவுட் சுற்றில் ஏதோ ஒரு வகையில் சொதப்பி தோல்வியை சந்தித்து வருகிறது. அதை விட 2019 அரையிறுதி உட்பட நியூசிலாந்துக்கு எதிராக ஐசிசி தொடர்களில் இதுவரை விளையாடிய 3 நாக் அவுட் போட்டிகளிலும் இந்தியா தோல்வியை சந்தித்துள்ளது ரசிகர்களுக்கு மிகப்பெரிய கவலையாக இருக்கிறது.

இந்நிலையில் அரையிறுதியில் வெற்றி தோல்வியைப் பற்றி கவலைப்படாமல் பயமின்றி விளையாடுங்கள் என்று இந்திய அணிக்கு வீரேந்திர சேவாக் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் 2011இல் தாங்கள் வெற்றி பெறுவதற்கு கொஞ்சம் தேவைப்பட்ட அதிர்ஷ்டம் தற்போதைய அணிக்கும் அவசியம் என்றும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “பயமின்றி விளையாடுங்கள். முடிவை பற்றி கவலைப்படாமல் உங்களுடைய சிறந்த செயல்பாடுகளை கொடுங்கள். அந்த வகையில் 11 வீரர்களும் தங்களுடைய சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தினால் இந்தியாவை கண்டிப்பாக வெல்லும். இத்தொடரில் கேப்டன் ரோஹித் சர்மா சுதந்திரமாக விளையாடி இந்தியாவுக்கு நல்ல துவக்கத்தை கொடுக்கும் பொறுப்புடன் செயல்பட்டு வருகிறார். 

குறிப்பாக ஷுப்மன் கில்லை அவர் பார்த்துக் கொள்வது நன்றாக இருக்கிறது. நீங்கள் நன்றாக விளையாட வேண்டும். அதிர்ஷ்டத்தை மட்டும் சார்ந்திருக்க முடியாது. ஆனால் ஆம் நாக் அவுட் போட்டிகளில் கொஞ்சம் அதிர்ஷ்டமும் தேவை. பாகிஸ்தானுக்கு எதிராக 2011 உலகக் கோப்பை போட்டியில் அவர்கள் 260 – 270 ரன்கள் மட்டுமே அடித்தனர். 

எங்கள் பக்கம் கொஞ்சம் அதிர்ஷ்டம் இருந்ததுடன் எங்களுடைய பவுலர்களும் சிறப்பாக பந்து வீசி குறைந்த இலக்கை கட்டுப்படுத்தினார்கள். எனவே தற்போது இந்தியா நன்றாக விளையாடுவதால் அவர்களை தேடி அதிர்ஷ்டம் வரும் என்று நம்புகிறேன்” என கூறியுள்ளார்.

இதைத் தொடர்ந்து இதே உலக கோப்பையில் லீக் சுற்றில் 20 வருடங்கள் கழித்து ஐசிசி தொடரில் நியூசிலாந்தை தோற்கடித்த உத்வேகத்துடன் இந்தியா இப்போட்டியில் களமிறங்கி வெற்றி காண போராட உள்ளது. அவர்களுக்கு ரசிகர்கள் சொந்த மண்ணில் ஆதரவை கொடுக்க உள்ளதால் இப்போட்டியில் அனல் பறக்கும் என்று நம்பலாம்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை