இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாட்டிங்ஹாமில் நடைபெற்று முடிந்தது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த அணியானது ஒல்லி போப், பென் டக்கெட், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஆகியோரது அதிரடியான ஆட்டத்தின் மூலம் முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தாலும் 416 ரன்களைக் குவித்தது. இதில் அதிகபட்சமாக ஒல்லி போப் 121 ரன்களையும், பென் டக்கெட் 71 ரன்களையும், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 69 ரன்களையும் குவித்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் அல்ஸாரி ஜோசப் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியானது கேவம் ஹாட்ஜின் சதத்தின் மூலமும் அலிக் அதானாஸ், ஜோஷுவா டா சில்வா ஆகியோரது அரைசதத்தின் மூலமாக வெஸ்ட் இண்டீஸ் அணியானது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 457 ரன்களைக் குவித்தது. இதில் அதிகபட்சமாக கேவ்ம் ஹாட்ஜ் 120 ரன்களையும், அலிக் அதானாஸ் 82 ரன்களையும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜோஷுவா டா சில்வா 82 ரன்களைக் குவித்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் கிறிஸ் வோக்ஸ் 4 விக்கெட்டுகளையும், கஸ் அட்கின்சன், ஷோயப் பஷீர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
பின்னர் 41 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணியில் நட்சத்திர வீரர்கள் ஜோ ரூட் மற்றும் ஹாரி ப்ரூக் ஆகியோர் சதமடித்து அசத்தினர். இதன்மூலம் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 425 ரன்களை குவித்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதில் அதிகபட்சமாக ஜோ ரூட் 122 ரன்களையும், ஹாரி ப்ரூக் 109 ரன்களையும், பென் டக்கெட் 76 ரன்களையும் சேர்த்தனர். விண்டீஸ் தரப்பில் ஜெய்டன் சீல்ஸ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 385 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
ஆனால் இலக்கை நோக்கி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் கேப்டன் கிரெக் பிராத்வைட் 47 ரன்களையு, ஜேசன் ஹோல்டர் 37 ரன்களையும் சேர்த்ததைத் தவிர்த்து மற்ற அனைத்து வீரர்களும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தர். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது இன்னிங்ஸில் 143 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இங்கிலாந்து தரப்பில் அபாரமாக பந்துவீசிய சோயப் பஷீர் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன்மூலம் இங்கிலாந்து அணி 241 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தியதுடன், 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி அசத்தியது.
இந்நிலையில், இப்போட்டியில் சதமடித்து அசத்திய இங்கிலாந்து வீரர் ஜோ ரூட், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் வாழ்நாள் சாதனையை உடைப்பார் என அந்த அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “இன்னும் சில மாதங்களில் இங்கிலாந்துக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த வீரராக ஜோ ரூட் சாதனை படைப்பார். அப்படியே சச்சின் டெண்டுல்கரையும் அவர் முந்தப்போவது ஸ்பெஷலாக இருக்கும். பேட்டிங்கில் தற்போதைய இங்கிலாந்து அணி கடந்த காலத்தை போல் பொறுப்பற்றவர்களாக தெரியவில்லை.
ஏனெனில் அவர்கள் தொடர்ச்சியாக ரன்களைக் குவித்து வருகின்றனர். மேலும் இங்கிலாந்து அணி தொடர்ச்சியாக இதுபோல் செயல்பட்டு வருவதற்கு ஜோ ரூட் பாறையைப் போல் நின்று பேட்டிங்கில் முக்கிய பங்காற்றி வருகிறார். அவர் தொடர்ந்து ரிவர்ஸ் ஸ்கூப் அடிப்பதை பார்க்க நான் விரும்புவேன்” என்று தெரிவித்துள்ளார். இதுவரை இங்கிலாந்து அணிக்காக 142 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஜோ ரூட் 32 சதங்கள் மற்றும் 62 அரைசதங்கள் என 11,940 ரன்களை குவித்து அசத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.