அமெரிக்காவில் நடைபெற்று வரும் இரண்டாவது சீசன் மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 6ஆவது லீக் ஆட்டத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் மற்றும் சியாட்டில் ஓர்காஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த நைட் ரைடர்ஸ் அணியில் தொடக்க வீரர் சுனில் நரைன் 5 ரன்களுக்கும், உன்முக்த் சந்த் 18 ரன்களுக்கும், ஷாகிப் அல் ஹசன் 7 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். அதன்பின் இணைந்த ஜேசன் ராய் மற்றும் டேவிட் மில்லர் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜேசன் ராய் தனது அரைசதத்தைப் பதிவுசெய்திருந்த நிலையில், 5 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 69 ரன்களை சேர்த்து தனது விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய அதிரடி வீரர் ஆண்ட்ரே ரஸலும் 14 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இறுதிவரை விக்கெட்டை இழக்காமல் இருந்த டேவிட் மில்லர் அபாரமாக விளையாடி 5 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 44 ரன்களைச் சேர்த்து அசத்தினார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் நைட் ரைடர்ஸ் அணியானது 5 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்களை சேர்த்தது.
இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய சியாட்டில் ஓர்காஸ் அணிக்கு ரியான் ரிக்கெல்டன் - நௌமன் அன்வர் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் நௌமன் அன்வர் 9 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் ரிக்கெல்டனுடன் இணைந்த குயின்டன் டி காக்கும் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இதில் ரிக்கெல்டன் தனது அரைசதத்தைப் பதிவுசெய்த நிலையில், இருவரது பார்ட்னர்ஷிப்பும் 100 ரன்களை கடந்ததுடன் அணியை வெற்றியை நோக்கியும் அழைத்துச் சென்றனர்.
இதில் குயின்டன் டி காக்கும் அரைசதத்தை பதிவுசெய்ய, மறுமுனையில் அதிர்டையாக விளையாடிய ரிக்கெல்டன் தனது சத்தைப் பதிவுசெயதுடன் அணியை வெற்றிக்கு அழைத்துச்சென்றார். இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ரியான் ரிக்கெல்டன் 9 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 103 ரன்களையும், குயின்டன் டி காக் 3 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 51 ரன்களையும் சேர்த்து களத்தில் இருந்தனர். இதன்மூலம் சியாட்டில் ஓர்காஸ் அணியானது 19.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 9 விக்கெட் வித்தியாசத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது.