மேஜர் லீக் கிரிக்கெட் 2025: சியாட்டில் ஆர்காஸுக்கு எதிரான லீக் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் எம்ஐ நியூயார்க் அணி நடப்பு சீசனில் தங்களுடைய முதல் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. 

Advertisement

எம்எல்சி தொடரில் இன்று நடைபெற்ற 9ஆவது லீக் போட்டியில் சியாட்டில் ஆர்காஸ் மற்றும் எம்ஐ நியூயார்க் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆர்காஸ் அணியில் தொடக்க வீரர் டேவிட் வார்னர் 4 ரன்னிலும், அடுத்து களமிரங்கிய ஆரோன் ஜோன்ஸ் 10 ரன்னில் பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். இதனையடுத்து ஜோடி சேர்ந்த ஷயாம் ஜஹாங்கீர் - கைல் மேயர்ஸ் இணை பொறுப்புடன் விளையாடி அணியின் விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தியதுடன், அணியின் ஸ்கோரையும் சீரான வேகத்தில் உயர்த்தினர். 

Advertisement

இதில் இருவரும் 70 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் ஜஹாங்கீர் 3 பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் 43 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதேசமயம் மறுபக்கம் அதிரடியாக விளையாடி வந்த கைல் மேயர்ஸ் அரைசதம் கடந்து அசத்திய நிலையில், 3 பவுண்டரி மற்றும் 10 சிக்ஸர்களுடன் 88 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். இறுதியில் கேப்டன் ஹென்ரிச் கிளாசென் 27 ரன்களையும், ஷிம்ரான் ஹெட்மையர் 21 ரன்களையும் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தனர். இதன்மூலம் சியாட்டில் ஆர்காஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்களைச் சேர்த்தது. 

பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய நியூயார்க் அணிக்கு மொனங்க் படேல் மற்றும் குயின்டன் டி காக் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் டி காக் 14 ரன்களுடன் நடையைக் கட்டினார். பின்னர் படேலுடன் இணைந்த மைக்கேல் பிரேஸ்வெல் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் தங்களுடைய அரைசதங்களைப் பதிவுசெய்து அசத்தியதுடன் இரண்டாவது விக்கெட்டிற்கு 120 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர். பின் சதத்தை நெருங்கிய மொனங்க் படேல் 8 பவுண்டரி, 7 சிக்ஸர்களுடன் 93 ரன்களில் ஆட்டமிழந்தார். 

Also Read: LIVE Cricket Score

அடுத்து களமிறங்கிய நிக்கோலஸ் பூரனும் 7 ரன்களுடன் நடையைக் கட்ட, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த மைக்கேல் பிரேஸ்வெல் 50 ரன்களையும், கீரென் பொல்லார்ட் 26 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் எம்ஐ நியூயார்க் அணி 19 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் சியாட்டில் ஆர்காஸ் அணியை வீழ்த்தி நடப்பு சீசனில் முதல் வெற்றியைப் பதிவுசெய்துள்ளது. இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மொனங்க் படேல் ஆட்டநாயகன் விருதை வென்றார்.  

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News