ஆடம் கில்கிறிஸ்டின் சாதனையை முறியடித்த முகமது ரிஸ்வான்!
பாகிஸ்தான், நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு ஒருநாள் தொடர் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் நடைபெற்று முதலிரண்டு போட்டிகளின் முடிவில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்நிலையில் இத்தொடரின் மூன்றாவது போட்டி நேற்று கராச்சியில் நடைபெற்ற நிலையில், அதில் பாகிஸ்தான் - தென் ஆப்பிரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் முடிவில் 5 விக்கெட்டுக்கு 352 ரன்களை குவித்தது. அண்டஹ் அணியில் அதிகபட்சமாக ஹென்ரிச் கிளாசன் 87 ரன்களையும், மேத்யூ பிரீட்ஸ்கி 83 ரன்களையும், கேப்டன் டெம்பா பவுமா 82 ரன்களையும் சேர்த்தனர். பாகிஸ்தான் அணி தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அஃப்ரிடி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதையடுத்து 353 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் பாபர் ஆசாம் 23 ரன்களிலும், சௌத் ஷகீல் 15 ரன்னிலும், ஃபகர் ஸமான் 41 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். அதன்பின் ஜோடி சேர்ந்த கேப்டன் முகமது ரிஸ்வான் மற்றும் சல்மான் ஆகா இணை அபாரமாக விளையாடியதுடன் தங்கள் சதங்களையும் பதிவுசெய்து 4ஆவது விக்கெட்டிற்கு 260 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர்.
இறுதியில் அபாரமாக விளையாடி வந்த சல்மான் அகா 16 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 134 ரன்களில் விக்கெட்டை இழந்தாலும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த முகமது ரிஸ்வான் 9 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 122 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் பாகிஸ்தான் அணி 49 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன் இறுதிப்போட்டிக்கும் முன்னேறியது.
இப்போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய சல்மான் ஆகா ஆட்டநாயகன் விருதை விருதை வென்றார். அதேசமயம் இப்போட்டியில் சதமடித்து அசத்திய அணியின் கேப்டன் முகமது ரிஸ்வான் சில சாதனைகளையும் தனது பெயரில் பதிவுசெய்துள்ளார். அதன்படி, ஒருநாள் போட்டிகளில் வெற்றிகரமான ரன் சேஸிங்கில் பாகிஸ்தானுக்காக அதிகபட்ச தனிநபர் ஸ்கோரை எடுத்த வீரர் எனும் சாதனையை முகமது ரிஸ்வான் படைத்துள்ளார். முன்னதாக பாபர் ஆசாம் 114 ரன்களை எடுத்ததே சாதனையாக இருந்தது.
இதுதவிர்த்து ஒருநாள் போட்டியில் ஒரு விக்கெட் கீப்பர் கேப்டன் சேஸிங் போது எடுத்த சிறந்த தனிநபர் ஸ்கோராகும் இது அமைந்தது. முன்னதாக கடந்த 2006 ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக ஆடம் கில்கிறிஸ்ட் 116 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது. அதேசமயம் 2015 உலகக் கோப்பையில் அயர்லாந்துக்கு எதிராக ஜிம்பாப்வேயின் பிரெண்டன் டெய்லர் 121 ரன்கள் எடுத்திருந்தாலும், அப்போட்டியில் ஜிம்பாப்வே தோல்வியைத் தழுவியது குறிப்பிடத்தக்கது.
Also Read: Funding To Save Test Cricket
ஒருநாள் போட்டிகளில் 300 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களை வெற்றிகரமாக துரத்தி இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சதங்களை அடித்த மூன்றாவது பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையையும் முகமது ரிஸ்வான் பெற்றுள்ளார். இதன்மூன் பாகிஸ்தான் அணிக்காக பாபர் அசாம் மற்றும் யூனிஸ் கான் மட்டுமே இந்த சாதனையை படைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.