இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக மோர்னே மோர்கல் நியமனம்?

Updated: Mon, Jul 29 2024 22:53 IST
Image Source: Google

இந்திய அணி தற்சமயம் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் அடங்கிய டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று வரும் டி20 தொடரின் முதலிரண்டு போட்டிகளில் முடிவில் இந்திய அணி இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் டி20 தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை நடைபெறவுள்ளது.

 இதில் ஏற்கெனவே இலங்கை அணி தொடரை இழந்துள்ளதால், இப்போட்டியில் வெற்றிபெற்று ஆறுதலை தேடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் இப்போட்டியிலும் வெற்றிபெற்று தொடரை முழுமையாக கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி விளையாடும் என்பதால் நிச்சயம் இப்போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போட்டிக்காக இரு அணிகளும் தயாராகி வருகின்றனர். 

இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது ஆகஸ்ட் 02ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. அதன்பின் இந்திய அணியானது வங்கதேச அணிக்கு எதிராக சொந்த மண்ணில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. இத்தொடருக்கான இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் மோர்னே மோர்க்கல் செயல்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது. 

முன்னதாக இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் நியமிக்கப்பட்டதை அடுத்து அணியின் மற்ற பயிற்சியாளர்களும் மாற்றப்பட்டனர். அதன்படி பேட்டிங் பயிற்சியாளராக அபிஷேக் நாயர், பந்துவீச்சு பயிற்சியாளராக மோர்னே மோர்கல் மற்றும் ஃபீல்டிங் பயிற்சியாளராக ரியான் டென் டெஸ்காட்டே ஆகியோரை நியமிக்க வேண்டும் என கம்பீர் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

 

அந்தவகையில் நடைபெற்றுவரும் இலங்கை அணிக்கு எதிரான தொடர் முதல் அணியின் தலைமை பயிற்சியாளராக கௌதம் கம்பீரும், அணியின் பேட்டிங் பயிற்சியாளர்களாக அபிஷேக் நாயர், ரியான் டென் டெஸ்காட் ஆகியோரும், ஃபீல்டிங் பயிற்சியாளராக திலீப்பும் நியமிக்கப்பட்ட நிலையில், பந்துவீச்சு பயிற்சியாளரான மோர்னே மோர்கல் மட்டும் இந்திய அணியுடன் இலங்கை பயணிக்காமல் இருந்தார். 

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

இந்நிலையில் எதிர்வரவுள்ள வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் முதல் இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக மோர்னே மோர்கல் செயல்படுவார் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதேபோல் காயம் காரணமாக ஓய்வில் இருந்து வரும் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியும் வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கம்பேக் கொடுப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றன. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை