நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் பாகிஸ்தான் அணி தற்சமயம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரண்டு ஒருநாள் போட்டியிலும் நியூசிலாந்து அணியானது வெற்றிபெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது.

Advertisement

இதனையடுத்து நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி போட்டி இன்று மவுண்ட் மவுங்கானுயில் உள்ள பே ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டி தொடங்கும் முன்னரே மழை பெய்த காரணத்தால் ஆட்டம் 42 ஓவர்களாக குறைக்கப்பட்டது. அதன்படி இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி கள்மிறங்கிய நியூசிலாந்து அணிக்கு ரைஸ் மாரியூ மற்றும் நிக் கெல்லி இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் நிக் கெல்லி 3 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.

Advertisement

பின்னர் இணைந்த மாரியூ - ஹென்றி நிக்கோலஸ் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் மாரியூ தனது அரைசதத்தை பூர்த்தி செய்து அசத்தினார். அதன்பின் ஹென்றி நிக்கோலஸ் 31 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 58 ரன்களைச் சேர்த்த கையோடு ரைஸ் மாரியூவும் தனது விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய அனுபவ வீரர் டேரில் மிட்செல் 43 ரன்களுக்கும், டிம் செஃபெர்ட் 26 ரன்களுக்கும், முகமது அப்பாஸ் 11 ரன்களுக்கும் என சீரான வேகத்தில் விக்கெட்டுகளை இழந்தனர். 

இறுதியில் கேப்டன் மைக்கேல் பிரேஸ்வெல் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினார். இப்போட்டியில் தொடர்ந்து அதிராடியாக விளையாடிய மைக்கேல் பிரேஸ்வெல் தனது அரைசதத்தைப் பதிவுசெய்ததுடன், ஒரு பவுண்டரி, 6 சிக்ஸர்கள் என 59 ரன்களைச் சேர்த்து கடைசி பந்தில் விக்கெட்டை இழந்தார். இதன் காரணமாக நியூசிலாந்து அணி 42 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 264 ரன்களைச் சேர்த்தது. பாகிஸ்தான் அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய அகிஃப் ஜாவெத் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு அப்துல்லா ஷஃபிக் - இமாம் உல் ஹக் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இமாம் உல் ஹக் ஒரு ரன் மட்டுமே எடுத்திருந்த நிலையில் காயம் காரணமாக பெவிலியனுக்கு திரும்பினார். அடுத்து களமிறங்கிய பாபர் ஆசாமும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் உயரத்தொடங்கியது. இதில் இருவரின் பார்ட்னர்ஷிப்பும் 50 ரன்களைத் தாண்டிய நிலையில் அப்துல்லா ஷஃபிக் 33 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய உஸ்மான் கானும் 12 ரன்களில் நடையைக் கட்டினார். 

அதன்பின் பாபர் ஆசாமுடன் ஜோடி சேர்ந்த கேப்டன் முகமது ரிஸ்வானும் விக்கெட் இழப்பை தடுத்த நிறுத்தும் முயற்சியில் இறங்கினர். இதில் பாபர் ஆசாம் அரைசதம் கடந்த நிலையில் 50 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து முகமது ரிஸ்வானும் 37 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் களமிறங்கிய சல்மான் அகா 11 ரன்களிலும், ஃபஹீம் அஷ்ரஃப் 3 ரன்களிலும், நசீம் ஷா 17 ரன்களிலும் என அடுத்தடுத்து ஆட்டமிழந்து பெவிலியன் திரும்ப, கடைசி வரை போராடிய தயாப் தாஹிரும் 33 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். 

Advertisement

பின்னர் களமிறங்கிய வீரர்களும் சோபிக்க தவற, பாகிஸ்தான் அணியானது 40 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 221 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. நியூசிலாந்து அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய பென் சீயர்ஸ் 5 விக்கெட்டுகளையும், ஜேக்கப் டஃபி 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். இதன்மூலம் நியூசிலாந்து அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியதுடன், ஒருநாள் தொடரையும் 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது. இப்போட்டியின் ஆட்டநாயகன் விருதை மைக்கேல் பிரேஸ்வெல்லும், தொடர் நாயகன் விருதை பென் சீயர்ஸூம் கைப்பற்றினர். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News