NZ vs BAN, 1st T20I: நியூசிலாந்தை வீழ்த்தி வங்கதேசம் வரலாற்று வெற்றி!

Updated: Wed, Dec 27 2023 15:07 IST
Image Source: Google

வங்கதேச கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை நியூசிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதையடுத்து இவ்விரு அணிகள் இடையேயான டி20 தொடர் இன்று தொடங்கியது. நேப்பியரில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு டிம் செய்ஃபெர்ட் - ஃபின் ஆலன் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அதிர்ச்சியளிக்கும் விதமாக டிம் செய்ஃபெட் ரன்கள் ஏதுமின்றி முதல் ஓவரிலேயே விக்கெட்டை இழந்தார். அதன்பின் இன்னிங்ஸின் இரண்டாவது ஓவரை வீசிய ஷொரிஃபுல் இஸ்லாம், நியூசிலாந்து அணியின் அதிரடி வீரர்கள் ஃபின் ஆலன் மற்றும் கிளென் பிலீப்ஸ் ஆகியோரது விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். 

இதனால் நியூசிலாந்து அணி ஒரு ரன்னிற்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் இணைந்த டெரில் மிட்செல் - மார்க் சாப்மேன் இணை அணியை சரிவிலிருந்து மீட்டெடுப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனல் மிட்செல் 14 ரன்களிலும், மார்க் சாப்மேன் 19 ரன்களிலும் என ஆட்டமிழந்தனர். அதன்பின் இணைந்த ஜிம்மி நீஷம் - மிட்செல் சான்ட்னர் இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 

பின் 23 ரன்களில் மிட்செல் சான்ட்னர் ஆட்டமிழக்க, மறுபக்கம் அதிரடியாக விளையாடி வந்த ஜிம்மி நீஷம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 4 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 29 பந்துகளில் 48 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். இறுதியில் ஆடம் மில்னே, டிம் சௌதீ, இஷ் சோதி ஆகியோர் தங்களால் முடிந்த ரன்களைச் சேர்த்தனர். 

இதனால் 20 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 9 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்களைச் சேர்த்து. நியூசிலாந்து தரப்பில் ஆடம் மில்னே 2 சிக்சர்களை விளாசி 16 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். வங்கதேச அணி தரப்பில் ஷொரிஃபுல் இஸ்லாம் 3 விக்கெட்டுகளையும், முஸ்தஃபிசூர் ரஹ்மான், மெஹிதி ஹசன் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய வங்கதேச அணிக்கு லிட்டன் தாஸ் - ரோனி தலுக்தார் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் தலுக்தார் 10 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கி அதிரடி காட்டிய கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ 19 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.

ஒருபக்கம் லிட்டன் தாஸ் நிதானமாக விளையாட, மறுபக்கம் அதிரடியாக விளையாட முயற்சித்த சௌமியா சர்க்கார் 22 ரன்களிலும், தாஹித் ஹிரிடோய் 19 ரன்களுக்கும், அஃபிஃப் ஹொசைன் ஒரு ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். பின்னர் லிட்டன் தாஸுடன் இனைந்த மெஹதி ஹசனும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வங்கதேச அணியின் வெற்றியும் உறுதியானது. 

இதன்மூலம் வங்கதேச அணி 18.4 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 5 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது. இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த லிட்டன் தாஸ் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் என 42 ரன்களையும், மெஹிதி ஹசன் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் என 19 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை