இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் மான்செஸ்டர் மற்றும் லார்ட்ஸில் நடந்த முதல் இரு டெஸ்டுகளிலும் இங்கிலாந்து வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில்  தொடரை கைப்பற்றியது. இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவலில் நேற்று தொடங்கியது.

Advertisement

இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர் டேனியல் லாரன்ஸ் 5 ரன்னில் வெளியேறினார். பின்னர் இணைந்த பென் டக்கெட் - கேப்டன் ஒல்லி போப் இணை அபாரமாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இருவரும் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தங்கள் அரைசதங்களையும் பதிவுசெய்தார்.

Advertisement

அதன்பின் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட பென் டக்கெட் 86 ரன்னில் விக்கெட்டை இழந்தாலும், மறுபக்கம் அபாரமாக விளையாடிய ஒல்லி போப் சதமடித்து அசத்தினார். ஆனால் மறுமுனையில் களமிறங்கிய ஜோ ரூட் 13 ரன்னில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார். அதன்பின் போதிய வெளிச்சமின்மை காரணமாக முதல் நாள் ஆட்டம் முன்கூட்டியே முடிக்கப்பட்டது. முதல் நாள் முடிவில் இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 44.1 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 221 ரன்களை எடுத்துள்ளது.

இலங்கைக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் கடைசி போட்டியின் முதல் இன்னிங்சில் சதம் அடித்து இங்கிலாந்து அணியின் கேப்டன் ஒல்லி போப் தனித்துவ சாதனை படைத்துள்ளார். அதன்படி கேப்டனாக, இங்கிலாந்துக்காக அதிவேக டெஸ்ட் சதம் அடித்ததன் அடிப்படையில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். இதற்கு முன் கடந்த 1990ஆம் ஆண்டு கிரஹாம் கூச் 96 பந்துகளில் சதமடித்ததே இதுநாள் வரை சாதனையாக இருந்து வருகிறது.

அந்த வரிசையில் தற்போது ஒல்லி போப் 102 பந்துகளில் சதமடித்து இந்த பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். மேற்கொண்டு இந்த சதமானது ஒல்லி போப்பின் 7ஆவது டெஸ்ட் சதமாகும். அதிலும் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் சதமடித்ததன் மூலம், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஏழு வெவ்வேறான அணிக்கு எதிராக தனது முதல் 7 சதங்களை அடித்த முதல் வீரர் எனும் புதிய வரலாறையும் படைத்துள்ளார். 

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

இங்கிலாந்து அணியின் வழக்கமான கேப்டன் பென் ஸ்டோக்ஸ் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகிய நிலையில், இலங்கைக்கு எதிரான அணியை வழிநடத்தி வந்த ஒல்லி போப் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக செயல்படத் தவறினார். இருப்பினும், மூன்றாவது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் சதம் அடித்து ஃபார்முக்கு திரும்புவதற்கான அறிகுறிகளைக் காட்டினார். இதனால் அவர் மீது எழுந்த விமர்சனங்களுக்கும் பதிலடியைக் கொடுத்துள்ளார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News