பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி, இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியானது இன்னிங்ஸ் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

Advertisement

இதையடுத்து பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி முல்தானில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் ஷான் மசூத் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணியானது காம்ரன் குலாம் மற்றும் சைம் அயூப் ஆகியோரது சிறப்பான ஆட்டத்தின் மூலம் முதல் இன்னிங்ஸில் 366 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட் ஆனது. பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக கம்ரான் குலாம் 118 ரன்களையும், சைம் அயூப் 77 ரன்களையும் சேர்த்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக ஜேக் லீச் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

Advertisement

இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த இங்கிலாந்து அணிக்கு ஸாக் கிரௌலி - பென் டக்கெட் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் கிரௌலி 27 ரன்களிலும், அடுத்து களமிறங்கிய ஒல்லி போப் 29 ரன்னிலும், நட்சத்திர வீரர் ஜோ ரூட் 34 ரன்களையும் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர்.  ஆனாலும் மறுபக்கம் தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய பென் டக்கெட் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 6ஆவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதன்பின் அபாரமாக விளையாடி வந்த பென் டக்கெட் 114 ரன்களை எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.

பின்னர் களமிறங்கிய ஹாரி புரூக் 9 ரன்னிலும், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஒரு ரன்னிலும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். இதனால் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 239 ரன்களை மட்டுமே சேர்த்தது.  இந்நிலையில் இன்று தொடங்கிய மூன்றாம் நாள் ஆட்டத்தை ஜேமி ஸ்மித் 12 ரன்களுடனும், பிரைடன் கார்ஸ் 2 ரன்களுடனும் தொடர்ந்தனர். இதில் ஜேமி ஸ்மித் 21 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து பிரைடன் கார்ஸ் 4 ரன்னிலும், மேத்யூஸ் பாட்ஸ் 6 ரன்னிலும், ஷோயப் பஷீர் 9 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். 

இதனால் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 291 ரன்களை மட்டுமே சேர்த்திருந்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. இதில் ஜேக் லீச் 24 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். பாகிஸ்தான் அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய சஜித் கான் 7 விக்கெட்டுகளையும், நோமன் அலி 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். இதனையடுத்து 75 ரன்கள் முன்னிலையுடன் பாகிஸ்தான் அணியானது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடரவுள்ளது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News