பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நேற்று ராவல்பிண்டியில் நடைபெற்று முடிந்தது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி பேட்டர்கள் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் அந்த அணி 18.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 90 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்மாகவே மார்க் சாப்மேன் 19 ரன்களை எடுத்திருந்தார். பாகிஸ்தான் அணி தரப்பில் ஷாஹீன் அஃப்ரிடி 3 விக்கெட்டுகளையும், ஓய்வு முடிவிலிருந்து திரும்பி வந்துள்ள முகமது அமீர் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

Advertisement

இதையடுத்து எளிய இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணிக்கு சைம் அயூப் - கேப்டன் பாபர் ஆசாம் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் சைம் அயூப் 4  ரன்களில் விக்கெட்டை இழக்க, கேப்டன் பாபர் ஆசாமும் 14 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். இதையடுத்து களமிறங்கிய உஸ்மான் கான் 7 ரன்களை எடுத்திருந்த நிலையில் இஷ் சோதி பந்துவீச்சில் க்ளீன் போல்டாகினார். இதனால் பாகிஸ்தான் அணி 56 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது. பின்னர் முகமது ரிஸ்வானுடன் இணைந்த இர்ஃபான் கான் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தார்.

Advertisement

அதேசமயம் மறுபக்கம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த முகமது ரிஸ்வான் அணியை வெற்றியை நோக்கி அழைத்துச்சென்றார். இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த முகமது ரிஸ்வான் 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 45 ரன்களையும், இர்ஃபான் கான் 18 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் பாகிஸ்தான் அணி 12.1 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையும் பெற்றுள்ளது. 

இந்நிலையில் இப்போட்டியில் முகமது ரிஸ்வான் 45 ரன்களைச் சேர்த்ததன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 3000 ரன்களைக் கடந்தார். இதன்மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 3000 ரன்களை கடந்த முதல் வீரர் எனும் சாதனையை படைத்துள்ளார். முன்னதாக இந்திய வீரர் விராட் கோலி மற்றும் பாகிஸ்தான் வீரர் பாபர் ஆசாம் ஆகியோர் 81 இன்னிங்ஸின் 3000 ரன்களை குவித்ததே சாதனையாக இருந்த நிலையில், முகமது ரிஸ்வான் 79 இன்னிங்ஸ்களில் மூவாயிரம் ரன்களைக் கடந்து புதிய சாதனையைப் படைத்து அசத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

அதிவேகமாக மூவாயிரம் ரன்களை கடந்த வீரர்கள்

  • முகமது ரிஸ்வான் (பாகிஸ்தான்) - 79 இன்னிங்ஸ்
  • விராட் கோலி (இந்தியா) - 81 இன்னிங்ஸ்
  • பாபர் ஆசாம் (பாகிஸ்தான்) - 81 இன்னிங்ஸ்
  • ஆரோன் ஃபிஞ்ச் (ஆஸ்திரேலியா) - 98 இன்னிங்ஸ்
  • மார்ட்டின் கப்தில் (நியூசிலாந்து) - 101 இன்னிங்ஸ்

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News