பில் சால்ட், ஆதில் ரஷித் அபாரம் - நியூசிலாந்தை வீழ்த்தி இங்கிலாந்து அசத்தல் வெற்றி!
நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது நடைபெற்று வருகிறது. இதில் இன்று இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று நடைபெற்றது. கிறிஸ்ட்சர்ச்சில் உள்ள ஹாக்லே ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணியில் ஜோஸ் பட்லர் 4 ரன்னிலும், ஜேக்கப் பெத்தெல் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 24 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்தனர்.
பின்னர் இணைந்த பில் சால்ட் - கேப்டன் ஹாரி புரூக் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் இருவரும் தங்களின் அரைசதங்களைப் பதிவு செய்தும் அசத்தினர். அதன்பின் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட பில் சால்ட் 11 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் உள்பட 85 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத் தொடர்ந்து 6 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள் என 78 ரன்களைச் சேர்த்த நிலையில் ஹாரி புரூக்கும் விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய டாம் பாண்டன் 4 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என 29 ரன்களைச் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தார்.
இதன் மூலம் இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 236 ரன்களைச் சேர்த்தது. நியூசிலாந்து தரப்பில் கைல் ஜேமிசன் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதன்பின் கடின இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு டிம் செஃபெர்ட் அதிரடியான தொடக்கத்தை வழங்கினார். அதேசமயம் மறுமுனையில் களமிறங்கிய டிம் ராபின்சன் 7 ரன்னிலும், ரச்சின் ரவீந்திர 8 ரன்னிலும், மார்க் சாப்மேன் 28 ரன்னிலும் ஆட்டமிழக்க, 4 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 39 ரன்களை எடுத்திருந்த டிம் செஃபெர்டும் ஆட்டமிழந்தார்.
Also Read: LIVE Cricket Score
அதனைத் தொடர்ந்து களமிறங்கிய வீரர்களில் மிட்செல் சான்ட்னர் 3 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 36 ரன்களைச் சேர்த்ததை தவிர மற்ற வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் நியூசிலாந்து அணி 18 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 171 ரன்களை மட்டுமே சேர்த்தது. இங்கிலாந்து தரப்பில் ஆதில் ரசித் 4 விக்கெட்டுகளையும், லுக் வுட், பிரைடன் கார்ஸ், லியாம் டௌசன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதன் மூலம் இங்கிலாந்து அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவு செய்தது.