ஸ்ரேயாஸ் ஐயர் தான் இந்திய அணியின் அடுத்த கேப்டன் - ராபின் உத்தப்பா நம்பிக்கை!
ரோஹித் சர்மா தாலைமையிலான இந்திய அணி தற்போது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடருக்கு முன்னதாக இங்கிலாந்து ஒருநாள் தொடரின் போதே இந்திய அணியின் துணைக்கேப்டனாக ஷுப்மன் கில் நியமிக்கப்பட்டார். இது அச்சமயத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்தியது.
ஏனெனில் இந்திய அணியில் ஷுப்மன் கில்லை விட சீனியர் வீரர்களான கேஎல் ராகுல், ஹர்திக் பாண்டியா போன்ற வீரர்கள் இருக்கும் சமயத்திலும் ஷுப்மன் கில்லுக்கு துணைகேப்டன் பதவி வழங்கியது பெரும் விமர்சனங்களுக்கு வழி வகுத்தது. ஆனால் தேர்வு குழுவினர் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஷுப்மன் கில்லை துணைக்கேப்டனாக நியமனம் செய்ததாக தகவல்கள் தெரிவித்தன. இது முன்னாள் வீரர்கள் பலரையும் அதிருப்தியில் ஆழ்த்தியது.
ஆனால் தன்மீதான விமர்சனங்களுக்கு பதிலடிக்கொடுக்கும் வகையில் ஷுப்மன் கில் அடுத்தடுத்த போட்டிகளில் அரைசதங்களையும், சதங்களையும் விளாசியதுடன் ஐசிசி ஒருநாள் பேட்டர்கள் தரவரிசையிலும் முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார். இதனால் ரோஹித் சர்மாவுக்கு பிறகு ஷுப்மன் கில் இந்திய அணியின் கேப்டனாக செயல்படுவார் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.இந்நிலையில் இந்திய அணியின் அடுத்த கேப்டன் யார் என்பது குறித்த கணிப்பை ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், "ஸ்ரேயாஸ் ஐயர் தான் இந்திய அணியின் அடுத்த கேப்டனாக இருப்பார் என்று நான் நினைக்கிறேன். அவர் இந்த வரிசையில் இருக்கிறார் என்று நான் நினைக்கிறேன், ஒருவேளை ஷுப்மான் கில்லை விடவும் அவர் முன்னணில் இருக்கலாம். அவருக்கு ஒரு அணியைக் கையாளும் குணமும் திறமையும் உள்ளது. ஏனெனில் அவர் கடந்த ஐபிஎல் சீசனில் நிறைய கற்றுக்கொண்டார் என்று நினைக்கிறேன்.
அவர் கௌதம் கம்பீர், சந்திரகாந்த் பண்டிட் மற்றும் அபிஷேக் நாயர் ஆகிய மூன்று வலுவான ஆளுமைகளுடன் பணியாற்றினார் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதனால் இந்திய அணியின் அடுத்த கேப்டன் பொறுப்புக்கு அவர் சரியான தேர்வாக இருப்பார்” என்று கூறியுள்ளார். இந்நிலையில் ராபின் உத்தப்பாவின் கூற்றால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆச்சரியமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏனெனில் தற்போது ஸ்ரேயாஸ் இந்திய அணிக்கு எந்த வடிவத்திலும் கேப்டனாகவோ அல்லது துணைக்கேப்டனாகவோ செயல்பட்டது இல்லை. தற்போது உள்ள இந்திய ஒருநாள் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, துணை கேப்டன் ஷுப்மான் கில் செயல்பட்டு வருகின்றனர். மறுபுறம், டெஸ்ட் போட்டிகளிலும் ரோஹித் சர்மா கேப்டனாகவும், ஜஸ்பிரித் பும்ரா துணை கேப்டனாகவும் உள்ளனர். அதேசமயம் டி20 அணியில் கேப்டனாக சூர்யகுமார் யாதவ், துணைக்கேப்டனாக அக்சர் படேல் உள்ளார்.
Also Read: Funding To Save Test Cricket
அத்தகைய சூழ்நிலையில், ஸ்ரேயாஸ் ஐயர் இந்த வீரர்கள் அனைவரையும் விட உயர்ந்த நிலையில் வைக்கப்படுவார், மேலும் அவர் அடுத்த கேப்டனாக தேர்ந்தெடுக்கப்படுவார் என்ற ராபின் உத்தப்பாவின் கூற்றை ரசிகர்களால் ஜீரணிக்க முடியவில்லை. இருப்பினும் உள்ளூர் போட்டிகளிலும், ஐபிஎல் தொடரிலும் ஸ்ரேயாஸ் ஐயரின் கேப்டன்சி தரவுகள் சிறப்பாக உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டே உத்தப்பா தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.