T20 WC 2024: சர்வதேச கிரிக்கெட்டில் சாதனைகளை குவித்த ரோஹித் சர்மா!

Updated: Mon, Jun 24 2024 23:00 IST
T20 WC 2024: சர்வதேச கிரிக்கெட்டில் சாதனைகளை குவித்த ரோஹித் சர்மா! (Image Source: Google)

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. செயின்ட் லூசியாவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் மிட்செல் மார்ஷ் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா - விராட் கோலி இணை தொடக்கம் கொடுத்தனர்.

இதில் விராட் கோலி ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். ஆனால் அதன்பின் தனது விஸ்வரூபத்தை வெளிப்படுத்திய ரோஹித் சர்மா அடுத்தடுத்து சிக்ஸரையும் பவுண்டரியையும் விளாசி 19 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து மிரட்டினார். அதேசமயம் மறுபக்கம் ரிஷப் பந்த் 15 ரன்களுடன் பெவிலியன் திரும்பினார். அதன்பின் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரோஹித் சர்மாவும் 92 ரன்களில் விக்கெட்டை இழந்தார். 

அதைத்தொடர்ந்து களமிறங்கிய வீரர்களில் சூர்யகுமார் யாதவ் 31 ரன்களையும், ஷிவம் தூபே 28 ரன்களையும், ஹர்திக் பாண்டியா 27 ரன்களையும் சேர்த்ததன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்களைச் சேர்த்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் மிட்செல் மார்ஷ் மற்றும் மார்கஸ் ஸ்டொய்னிஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனையடுத்து கடின இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணி விளையாடி வருகிறது. 

இந்நிலையில் இப்போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா 8 சிக்ஸர்களை விளாசியதன் மூலம், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 200 சிக்ஸர்களை கடந்தார். இதன்மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 200 சிக்ஸர்களை விளாசிய முதல் வீரர் எனும் வரலாற்று சாதனையை ரோஹித் சர்மா படைத்துள்ளார். மேற்கொண்டு இன்றைய போட்டியில் 92 ரன்களைச் சேர்த்ததன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் 19ஆயிரம் ரன்களையும் குவித்து அசத்தியுள்ளார். 

ரோஹித் சர்மா படைத்த சாதனைகள்

  • சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 200 சிக்ஸர்கள்
  • சர்வதேச கிரிக்கெட்டில் 19 ஆயிரம் ரன்கள்
  • டி20 உலகக்கோப்பை தொடரில் அதிக பவுண்டரி அடித்த வீரர்
  • ஒரு எதிரணிக்கு எதிராக அதிக சிக்ஸர்களை அடித்த வீரர்
  • டி20 உலகக்கோப்பை 2024 தொடரில் அதிவேக அரைசதம் அடித்த வீரர்
  • டி20 உலகக்கோப்பை தொடரில் அதிகபட்ச ஸ்கோரை பதிவுசெய்த இரண்டாவது வீரர்
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை