தோல்விக்கு ஆடுகளத்தை குறை சொல்வது சரியாக இருக்காது - ரோஹித் சர்மா!

Updated: Fri, Mar 03 2023 12:47 IST
Rohit Sharma Doesn't Want To Talk About Pitches! (Image Source: Google)

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலையில் இருந்த நிலையில், இரு அணிகள் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி இந்தூரில் நடைபெற்றது.

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் வெறும் 109 ரன்களுக்கு ஆல அவுட்டானது. ஆஸ்திரேலிய அணி சார்பில் அதிகபட்சமாக மேத்யூ குணாமென் 5 விக்கெட்டுகளையும், நேதன் லயோன் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்பின் முதல் இன்னிங்ஸை துவங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு உஸ்மான் கவாஜா 60 ரன்களும், லபுசாக்னே 31 ரன்களும் எடுத்து கொடுத்தாலும், மற்ற வீரர்கள் பெரிதாக ரன் குவிக்காததால் ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில் 197 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இந்திய அணி சார்பில் ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டுகளையும், உமேஷ் யாதவ் மற்றும் ரவிச்சந்திர அஸ்வின் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். பின்னர் 88 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி, இரண்டாவது இன்னிங்ஸிலும் ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறி 163 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக புஜாரா 59 ரன்கள் எடுத்தார். பந்துவீச்சில் ஆஸ்திரேலிய அணி சார்பில் நாதன் லையன் 8 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதன்பின் 76 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிக எளிய இலக்கை துரத்தி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 18.5 ஓவரில் இலக்கை மிக இலகுவாக எட்டிய 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தநிலையில், ஆஸ்திரேலிய அணியுடனான இந்த தோல்வி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா, தோல்விக்கு ஆடுகளத்தை குறை சொல்வது சரியாக இருக்காது என தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய ரோஹித் சர்மா, “நாங்கள் பேட்டிங்கில் சரியாக செயல்படவில்லை, இதுவே எங்களது தோல்விக்கான முக்கிய காரணம். இரண்டு இன்னிங்ஸிலும் நாங்கள் பேட்டிங்கில் சிறப்பாக செயல்படவில்லை. ஆடுகளம் எப்படி இருந்தாலும் நாங்கள் எங்களது வேலையை செய்வது மட்டுமே சரியானதாக இருக்கும், தோல்விக்கு ஆடுகளத்தை குறை கூற முடியாது. 

இது போன்ற சவாலான ஆடுகளங்கத்தில் விளையாடும் போது கூடுதல் தைரியத்துடன் விளையாட வேண்டும். ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் தங்களது திட்டங்களை சரியாக செயல்படுத்த நாங்களே அனுமதித்துவிட்டோம், எங்களால் அவர்களுக்கு நெருக்கடியை கொடுக்கவே முடியவில்லை. நாதன் லையனை பாராட்டியே ஆக வேண்டும். ஆடுகளத்தின் தன்மைக்கு ஏற்ப நாங்கள் இந்த போட்டியில் விளையாடவில்லை என்பதே உண்மை” என்று தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை