இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இருந்து விலகும் ரோஹித் சர்மா?
கடந்த 2022ஆம் ஆண்டு இந்திய அணியின் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலகியதை அடுத்து, மூன்று வடிவிலான இந்திய அணியின் கேப்டனாகவும் ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டார். மேற்கொண்டு அவரின் கேப்டன்சி கீழ் இந்திய அணி அடுத்தடுத்து வெற்றிகளைக் குவித்தும் அசத்தியது.
அதிலும் குறிப்பாக கடந்த 2023ஆம் ஆண்டு ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டி வரை இந்திய அணியை அழைத்துச் சென்றது, ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியை சாம்பியனாக்கியது என பல்வேறு சாதனைகளைக் குவித்துள்ளார். ஆனால் அதன்பின் நடைபெற்ற நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி படுத்தோல்வியைச் சந்தித்தது.
இதனால் ரோஹித் சர்மாவின் கேப்டன்சி குறித்த கேள்விகள் அதிகரித்தன. ஆனால் நடந்து முடிந்த சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்திய அணியை வழிநடத்தியதுடன் அணிக்கு சாம்பியன் பட்டத்தையும் வென்று கொடுத்து தனது கேப்டன்சியை நிரூபித்துள்ளார். ஆனாலும், அவர் இன்னும் டெஸ்ட் வடிவத்தில் பெரிய வெற்றியை எதிர்பார்க்கிறார். இருப்பினும் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேற தவறிவுள்ளதால், அவருக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை.
இந்நிலையில், நடப்பு ஐபிஎல் தொடருக்கு பிறகு இந்திய அணியானது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கான இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா இருப்பாரா அல்லது அணிக்கு புதிய கேப்டன் நியமிக்கப்படுவாரா என்ற கேள்விகள் ரசிகர்கள் மத்தில் அதிகரித்துள்ளன. இதில் பிசிசிஐ என்ன முடிவு எடுக்கும் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் எதிர்வரும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மா விளையாடமாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் காரணமாக அவரது பேட்டிங் ஃபார்ம் குறித்த கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் தான் அவர் எதிர்வரும் இங்கிலாந்து தொடரில் இருந்து தன்னை விலக்கி கொள்ளவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
Also Read: Funding To Save Test Cricket
அதேசமயம் மற்றொரு நட்சத்திர வீரர் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடவுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஒருவேளை ரோஹித் சர்மா இங்கிலாந்து தொடரில் இருந்து விலகும் நிலையில், இந்திய அணி புதிய கேப்டன் தலைமையில் இத்தொடரை எதிர்கொள்ளும். அந்தவகையில் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் யார் இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.