இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் இந்திய அணி தற்சமயம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் நடைபெற்ற முடிந்த முதல் ஒருநாள் போட்டியில் இரு அணிகளும் தலா 230 ரன்களைச் சேர்த்து போட்டியை டையில் முடித்த நிலையில், இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையும் பெற்று அசத்தியுள்ளது.

Advertisement

இந்நிலையில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை (ஆகஸ்ட் 07) கொழும்புவில் உள்ள ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஏற்கனெவே இலங்கை அணி இரண்டாவது போட்டியில் வெற்றிபெற்றுள்ள உத்வேகத்துடனும், அதேசமயம் கடந்த போட்டியில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனையில் இந்திய அணியும் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

Advertisement

இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றன. இந்நிலையில் இப்போட்டியில் விளையாடும் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா சில சாதனைகளை முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்தவகையில், இலங்கை அணிக்கு எதிரான முதலிரண்டு ஒருநாள் போட்டிகளிலும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோஹித் சர்மா அடுத்தடுத்து அரைசதங்களையும் பதிவுசெய்து அசத்தியுள்ளார்.

இந்நிலையில் நாளை மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் ரோஹித் சர்மா அதிரடியாக விளையாடும் பட்சத்தில் வெஸ்ட் இண்டீஸின் கிறிஸ் கெயில், இந்திய அணியின் ராகுல் டிராவிட் ஆகியோரது சாதனைகளை முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்களை விளாசிய வீரர்கள் வரிசையில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா 264 போட்டிகளில் விளையாடி 330 சிக்ஸர்களை விளாசி மூன்றாம் இடத்தில் உள்ளார்.

இவருக்கு முன்னதாக வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கிறிஸ் கெயில் 301 ஒருநாள் போட்டிகளில் 331 சிக்ஸர்களை விளாசி இரண்டாம் இடத்தில் தொடர்ந்து வருகிறார். இந்நிலையில் நாளை ரோஹித் சர்மா மேற்கொண்டு 2 சிக்ஸர்களை விளாசும் பட்சத்தில் கெயிலின் சாதனையை முறியடிப்பார். அதேசமயம் இப்பட்டியலின் முதலிடத்தில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷாஹித் அஃப்ரிடி 398 போட்டிகளில் விளையாடி 351 சிக்ஸர்களுடன் முதலிடத்தில் நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

அதேசமயம் நாளைய போட்டியில் ரோஹித் சர்மா மேற்கொண்டு 60 ரன்களை அடிக்கும் பட்சத்தில் இந்திய அணிக்காக ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த நான்காவது வீரர் எனும் ராகுல் டிராவிட்டின் வாழ்நாள் சாதனையை முறியடிபார் என்பது குறிப்பிடத்தக்கது. ரோஹித் சர்மா இதுவரை 264 போட்டிகளில் விளையாடி 49.23 சராசரியில் 10,831 ரன்களை எடுத்துள்ளார். அதேசமயம் ராகுல் டிராவிட் 344 போட்டிகளில் விளையாடி 39.16 சராசரியுடன் 10,889 ரன்கள் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News