இந்திய அணியில் தனுஷ் கோட்டியான் இடம்பிடித்தது ஏன்? - ரோஹித் சர்மா விளக்கம்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியை பிசிசிஐ நேற்றைய தினம் அறிவித்தது. இந்த அணியில், ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, மும்பை ஆல்ரவுண்டர் தனுஷ் கோட்டியானுக்கு அணியில் இடம் கிடைத்துள்ளது.
இந்நிலையில் அக்ஸர் படேல், குல்தீப் யாதவ் போன்ற நட்சத்திர வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ள நிலையில், அவர்களுக்கு பதிலாக மற்றொரு அறிமுக வீரரை அணியில் சேர்த்திருப்பது ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில், குல்தீப் யாதவ், அக்ஸர் படேல் போன்ற வீரர்களை விட தனுஷ் கோட்டியானுக்கு இந்த டெஸ்ட் அணியில் ஏன் வாய்ப்பு வழங்கப்பட்டது ஏன் என்பது குறித்த கேள்விக்கு இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பதிலளித்தார்.
இதுகுறித்து பேசிய அவர், "ஒரு மாதத்திற்கு முன்பு தனுஷ் கோட்டியான் இங்கு வந்து பயிற்சி போட்டிகளில் விளையாடினார். அதேசமயம் குல்தீப் யாதவிற்கு ஆஸ்திரேலிய விசா இல்லை. அதனல் நான்காவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக சீக்கிரம் இங்கு வருவதற்கு ஒருவர் தேவைப்பட்டார். அந்த சமயத்தில் தனுஷ் கோட்டியான் தயாராக இருந்ததன் காரணமாகவே அவரை நாங்கள் அணியில் சேர்த்துள்ளோம். ஆனால் நகைச்சுவை ஒருபுறம் இருக்கட்டும்.
மேலும் அவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வருகிறார், சிட்னி அல்லது மெல்போர்னில் நாங்கள் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களை விளையாட வேண்டி இருந்தால் எங்களுக்கு ஒரு பேக்-அப் தேவை. அதேசமயம், குல்தீப் யாதவ் குடலிறக்க அறுவை சிகிச்சை செய்து கொண்டதால் அவர் தற்சமயம் 100 சதவீதம் உடல் தகுதி இல்லை. அதேபோல் அக்ஷர் படேலும் சமீபத்தில் தான் தந்தையாகிவுள்ளார். அதனால் அவர் பயணம் செய்யப் போவதில்லை.
எனவே, எனவே, தனுஷ் எங்களுக்கு சிறந்த தேர்வாக இருந்தார், கடந்த சீசனில் மும்பை அணி ரஞ்சி கோப்பையை வென்றதற்கு அவரும் ஒருவராக இருந்துள்ளார். மேலும் உள்ளூர் போட்டிகளிலும் அவர் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் அணிக்கு பங்களிப்பை வழங்கி வருகிறார்” என்று விளக்கமளித்துள்ளார். முன்னதாக ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இந்திய ஏ அணியில் தனூஷ் கோட்டியான் அங்கம் வகித்தார்.
அந்தவகையில் ஆஸ்திரேலிய ஏ அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் அவர் 44 ரன்களையும், ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார். மேலும் இதுவரை 33 முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள தனுஷ் கோட்டியான் பேட்டிங்கில் 2 சதம், 13 அரைசதங்கள் என 1525 ரன்களையும், பந்துவீச்சில் 3 ஐந்து விக்கெட் ஹாலுடன் சேர்த்து 101 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். இதனுடன், 2023-2024 ரஞ்சி கோப்பை தொடாரில் மும்பை அணி சாம்பியன் பட்டத்தை வெல்லவதிலும் முக்கிய பங்கு வகித்தார்.
Also Read: Funding To Save Test Cricket
கடைசி இரண்டு போட்டிகளுக்கான இந்திய டெஸ்ட் அணி: யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், ஷுப்மன் கில், விராட் கோலி, ரிஷப் பந்த், ரோஹித் சர்மா (கே), ரவீந்திர ஜடேஜா, நிதிஷ் குமார் ரெட்டி, ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், ஆகாஷ் தீப், துருவ் ஜூரல், வாஷிங்டன் சுந்தர், சர்ஃபராஸ் கான், தேவ்தத் படிக்கல், அபிமன்யு ஈஸ்வரன், பிரசித் கிருஷ்ணா, ஹர்ஷித் ராணா, தனூஷ் கோட்டியான்.