இலங்கை - இந்திய அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி கொழும்புவில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணியானது 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 230 ரன்களைச் சேர்த்தது. அதன்படி இலங்கை அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய அவிஷ்கா ஃபெர்னாண்டோ 1 ரன் எடுத்த நிலையில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய குசால் மெண்டிஸ் 14 ரன்னிலும், சதீரா சமரவிக்ரமா 8 ரன்னிலும், சரித் அசலங்கா 14 ரன்னிலும் வெளியேறினார். ஒரு பக்கம் விக்கெட் வீழ்ந்தாலும் மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய பதும் நிஷங்கா தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார்.
அசத்திய நிலையில், 56 ரன்னில் விக்கெட்டை இழந்தார். அதனைத்தொடர்ந்து களமிறங்கிய துனித் வெல்லாலகே ஒருபக்கம் பொறுப்புடன் விளையாடினாலும், மறுமுனையில் வநிந்து ஹசரங்கா, ஜனித் லியானகே, அகிலா தனஞ்செய ஆகியோர் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். இருப்பினும் இறுதிவரை களத்தில் இருந்த துனித் வெல்லாலகே அரைசதம் கடந்ததுடன், 7 பவுண்டரி 2 சிக்ஸர்கள் என 67 ரன்களைச் சேர்த்து ஃபினிஷிங்கைக் கொடுத்தார். இந்திய அணி சார்பில் அர்ஷ்தீப் சிங், அக்சர் பட்டேல் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா - ஷுப்மன் கில் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்பத்திய கேப்டன் ரோஹித் சர்மா அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசித்தள்ளினார். அதேசமயம் மறுபக்கம் தடுமாறி வந்த ஷுப்மன் கில் 16 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதேசமயம் மறுமுனையில் அதிரடியாக விளையாடி அரைசதத்தைப் பதிவுசெய்த ரோஹித் சர்மாவும் 7 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 57 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார்.
இந்நிலையில் இப்போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா 3 சிக்ஸர்களை விளாசியதன் மூலம், சர்வதேச கிரிக்கெட்டில் அணி கேப்டனாக அதிக சிக்ஸர்களை விளாசிய வீரர் எனும் இங்கிலாந்து முன்னாள் கேப்டன் ஈயன் மோர்கன் சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளார். முன்னதாக இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஈயன் மோர்கன் 180 இன்னிங்ஸ்களில் 233 சிக்ஸர்களை விளாசி முதலிடத்தில் இருந்த நிலையில், தற்போது ரோஹித் சர்மா 134 இன்னிங்ஸ்களில் 234 சிக்ஸர்களை விளாசி இந்த பட்டியலில் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு கேப்டனாக அதிக சிக்ஸர்கள்
- ரோஹித் சர்மா - 134 இன்னிங்ஸில் 234 சிக்ஸர்கள்
- ஈயான் மோர்கன் - 180 இன்னிங்ஸில் 233 சிக்ஸர்கள்
- எம்எஸ் தோனி - 330 இன்னிங்ஸ்களில் 211 சிக்ஸர்கள்
- ரிக்கி பாண்டிங் - 376 இன்னிங்ஸில் 171 சிக்ஸர்கள்
- பிரண்டன் மெக்கல்லம் - 140 இன்னிங்ஸில் 170 சிக்ஸர்கள்